Published : 29 Sep 2016 08:09 AM
Last Updated : 29 Sep 2016 08:09 AM

பாகிஸ்தானில் நடக்கவுள்ள சார்க் மாநாடு ரத்தாகிறது

இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ் தான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள சார்க் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இம்மாநாடு ரத்தாகும் என உச்சி மாநாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் நேபாளத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 18 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு ராஜாங்க ரீதியில் பதிலடி கொடுக் கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருகட்டமாக சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேலும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப் படுத்தும் விதமாக, இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ள 19-வது சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்தது. உடனடியாக வங்கதேசம், பூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக மாநாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் நேபாளத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தன. மற்றொரு உறுப்பு நாடான இலங்கையும், இந்தியா இல்லாமல் சார்க் மாநாடு நடப்பது சாத்தியமில்லை என கருத்து தெரிவித்தது. மேலும் ஒரு நாடு பங்கேற்காவிட்டாலும் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும் என்பது விதி. இதனால் அறிவித்தபடி சார்க் உச்சி மாநாடு நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் நேபாள அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘நான்கு நாடுகள் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருப்பதால் சார்க் உச்சி மாநாட்டை நடத்தும் பேச்சுக்கே இடமில்லாமல் ஆகிவிட்டது. இம்முறை சார்க் தலைமை பொறுப்பு நேபாளத்திடம் உள்ளது. உறுப்பு நாடுகள் கலந்து கொள்ள முன்வராததால் 2016 சார்க் உச்சி மாநாடு ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்’’ என தெரிவித்தன.

எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள் நடந்திருப்பதால் மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா தெரிவித்த அதே காரணத்தைதான் வங்கதேசம், பூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளும் குறிப்பிட்டுள்ளன. இது தவிர, உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் குறுக்கிடுவதால் மாநாட்டைப் புறக்கணிப்பதாக வங்கதேசமும், உறுப்பு நாடுகளின் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளித்து விலகுவதாக பூடானும் விளக்கம் அளித்துள்ளன.

தீவிரவாதம், வன்முறை ஆகிய காரணங்களை குறிப்பிட்டு நான்கு நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்த தும், அதன் காரணமாக மாநாடு ரத்தாவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x