Published : 29 Oct 2015 12:19 PM
Last Updated : 29 Oct 2015 12:19 PM

பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க விஞ்ஞானி பி.எம்.பார்கவா முடிவு: நாட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக கருத்து

நாட்டின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமான பி.எம்.பார்கவா தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் 'தி இந்து'வுக்கு (ஆங்கில நாளிதழுக்கு) அளித்த பேட்டியில், "நாட்டில் தற்போது நிலவும் சூழல் தொடர்ந்தால் இந்திய தேசம் ஜனநாயக தேசம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு பாகிஸ்தான் போல் மதசார்பு நாடாக உருவாகும். நம் நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வருத்தமளித்தப்பதாக இருக்கிறது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவிருக்கிறேன். ஒரு விஞ்ஞானியாக என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார்.

அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்:

அண்மையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கூடங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர். அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன வேலை. அதேபோல் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வருத்தத்துக்குரியது என பார்கவா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை பாராட்ட வேண்டும்:

அவர் மேலும் கூறும்போது, "என்னுடைய நூலில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர்களை ஒரு விஷயத்துக்காக நான் வெகுவாக பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியினர் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கெடுபிடி விதிக்கவில்லை. அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும்" என்றார்.

நாட்டில் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் மதிப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என வருத்தம் தெரிவித்தார்.

அறிவியல் அறிவு குடிமகனின் கடமை:

இந்திய அரசியல் சாசனத்தின் 51 (எச்) பிரிவின்படி இந்திய மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது என்பது கடமை என பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் பதவியேற்க நல்ல நேரம் பார்க்கிறார்கள், பல்வேறு மூடநம்பிக்கைகளும் முன் நிறுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது விநாயகர் பால் குடிப்பதாக எழுந்த வதந்திதான்யும் பின்னர் அது உண்மையல்ல என்பதை மக்களுக்கு நாங்கள் தொலைக்காட்சி வாயிலாக செயல்முறை விளக்கம் மூலம் நிரூபித்ததுமே ஞாபகத்துக்கு வருகிறது என பார்கவா கூறியுள்ளார்.

பிரதமர் இப்படிச் செய்யலாமா?

இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் விநாயகருக்கு யானை தலை பொருத்தப்பட்டதை தொடர்புப்படுத்தி இந்தியர்களுக்கு பண்டைய காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தெரிந்திருக்கிறது எனப் பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா என பார்கவா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விஞ்ஞானிகளும் வரலாற்றாசிரியர்களும்...

இதேபோல நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஞ்ஞானிகள் அசோக் சென், பி.பல்ராம் உள்ளிட்டோரும் பத்ம பூஷண் விருதை திருப்பித் தரப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே, நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பதைக் கண்டித்து வரலாற்றாசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ரொமிலா தாப்பர், இர்பான் ஹபிப், கேஎன் பன்னிகர் மற்றும் மிருதுளா முகர்ஜி உள்ளிட்ட 53 முன்னணி வரலாற்றாசிரியர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில், "கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்படுகிறது. ஒரு கருத்துக்கு எதிர்ப்பு எழுந்தால் அதை மாற்று கருத்து மூலம் பதில் அளிப்பதை விடுத்து துப்பாக்கி குண்டுகள் அல்லது வன்முறை மூலம் பதில் அளிக்கப்படுகிறது.

இதைக் கண்டித்து எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் விருதுகளை திருப்பித் தருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் கருத்து எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். இது கவலை அளிக்கிறது" என கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x