Last Updated : 08 Jan, 2017 02:53 PM

 

Published : 08 Jan 2017 02:53 PM
Last Updated : 08 Jan 2017 02:53 PM

பணமதிப்பு நீக்கத்தின் எதிர்மறைத் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும்: பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ்

பணமதிப்பு நீக்கம் நலிவுற்றோர் மீது கடும் எதிர்மறை விளைவுக்ளை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்றும் இந்த நிலைமை நீடிக்கும் என்றும் பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றிய வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் மேலும் கூறும்போது, “ஆட்சியில் இருக்கும் பாஜக தான் ஊழலின் விரோதி என்று பெருமை கொள்கிறது என்றால் முதலில் தங்கள் கட்சிப்பணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே?

பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் நலிவுற்றோர் மற்றும் தொழிலாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு எதிர்பார்ப்பது போல் பணமதிப்பு நீக்கத்தின் எதிர்மறை விளைவுகள் அவ்வளவு எளிதில் தீர்ந்து விடப்போவதில்லை. வெகுஜன பொருளாதார நடவடிக்கைத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், தாக்கங்க்ள் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் வருவதில்லை.

தனியார் துறையில் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்தப் பரவலான சரிவிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் எடுக்கும்.

பணமதிப்பு நீக்கத்தின் மறைந்திருக்கும் நோக்கம் வேறு ஒன்றாகும், ஒருவேளை கார்ப்பரேட் நலன்கள், தேர்தல் அரசியலாக இருக்கலாம், பணமதிப்பு நீக்கம் இந்த அடிப்படையில் வெற்றியடைந்தாலும் மக்களின் இன்னல்கள் அதை விட பெரிது.

கோடிக்கணக்கானோரை நெருக்குதலுக்குள்ளாக்குவதை விட பெரிய கருப்புப் பண முதலைகளைப் பிடிக்க அரசிடம் போதிய அளவு அதிகாரமும், எந்திரங்களும் உள்ளன. உண்மையில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் லோக்பால் சட்டம், ஊழல் தகவல் அளிப்போர் பாதுகாப்பு சட்டம், குறைதீர்ப்பு மசோதா ஆகியவற்றை அரசு மீட்க வேண்டும்” என்றார் ட்ரீஸ்.

பெல்ஜியத்தில் பிறந்த இந்தியரான ட்ரீஸ் இந்தியாவில் பட்டினி, வறட்சி மற்றும் என்.ஆர்.இ.ஜி.ஏ ஆகியவை தொடர்பாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x