Last Updated : 29 Nov, 2016 10:05 AM

 

Published : 29 Nov 2016 10:05 AM
Last Updated : 29 Nov 2016 10:05 AM

பணத் தட்டுப்பாடு எதிரொலி: ஸ்வைப் மெஷின் விலையை குறைக்க நடவடிக்கை

12.5% கலால் வரி, 4% சிறப்பு வரியை ரத்து செய்தது மத்திய அரசு

வர்த்தக நிறுவனங்களில் நுகர்வோரிடம் இருந்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் மூலம் பணம் வசூலிக்க பயன்படும் ஸ்வைப் மெஷின்களுக்கான கலால் மற்றும் சிறப்பு வரிகளை அரசு ரத்து செய்துள்ளது.

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்களை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு தடை செய்து, புதிய 2,000, 500 தாள்களை அறிமுகப்படுத்தியது. புதிய 500 ரூபாய் தாள் சரளமாக புழக்கத்துக்கு வராத நிலையில், 2,000 தாள் மட்டும் பொதுமக்கள் கைக்கு கிடைத்து வருகின்றன.

ஆனால், அன்றாட அத்தியா வசியப் பொருட்கள் மற்றும் இதர தேவைகளுக்காகவும் கடை களுக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது, 2,000 தாள்களை கொடுத்தால் மீதி சில்லறையை கொடுக்க 100 ரூபாய் தாள்கள் இல்லாமல் கடைக்காரர்கள் விழி பிதுங்குகிறார்கள்.

கையில் இருக்கும் சொற்ப பணத்தையும் முழுமையாக செல விட முடியாத நிலையில் நுகர்வோர் உள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வாக பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஸ்வைப் மெஷின்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன.

ஆனால், மளிகை, காய்கறி போன்ற கடைகள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்து வதில்லை. ஏறக்குறைய ரூ.3 ஆயிரத்தில் கிடைக்கக் கூடிய இந்த இயந்திரங்களுக்காக சம்பந்தப் பட்ட வங்கிக்கு வருடாந்திர வாடகை யாக சொற்ப தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இயந்திரத்தில் உள்ள சிம் கார்டுக்காகவும் ஒருமுறை கட்ட ணமாக சில நூறுகள் செலுத்த வேண்டியிருக்கும்.இதனால் சிறிய கடைக்காரர்கள் ஸ்வைப் மெஷின்களை வாங்கி வைக்க தயங்குவதாக கருதப்படுகிறது.

இந்த தயக்கத்தை போக்கவும், ரூபாய் தாள் தட்டுப்பாட்டினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிஓஎஸ் (பாயின்ட் ஆப் சேல்) என்றழைக்கப்படும் இந்த ஸ்வைப் மெஷின்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இவற்றுக்கான 12.5 சதவீத கலால் வரி மற்றும் 4 சதவீத சிறப்பு கூடுதல் வரிகளை மத்திய அரசு விலக்கியுள்ளது.

2017 மார்ச் 31-ம் தேதி வரை, ஸ்வைப் மெஷின்களுக்கான வரி விலக்கு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்ட ரீதியாக இந்த சலுகைகளை செல்லுபடியாக்கும் வகையில், மக்களவையில் நேற்று அறிவிப்பாணை ஒன்றை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x