Last Updated : 11 Jan, 2015 12:23 PM

 

Published : 11 Jan 2015 12:23 PM
Last Updated : 11 Jan 2015 12:23 PM

நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவரைக் கொன்றது ரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின்தான் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

1945ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் நேதாஜி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்று நேதாஜி மாயமடைந்த வழக்கை விசாரித்த முகர்ஜி குழுவுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. எனவே இது ஒரு கட்டுக்கதை ஆகும்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானும் ஜெர்மனியும் தோல்வியடைந்தன. அந்த இருநாடுகளிடம் இருந்து உதவி பெற்று வந்த நேதாஜி, அதன் பிறகு சீனாவின் மஞ்சூரியா எனும் பகுதிக்குச் சென்றார். அன்று அது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அங்கு சென்றால் ரஷ்யாவின் உதவியை நாடலாம் என்று நேதாஜி நினைத்தார். ஆனால் ரஷ்யாவை ஆண்டு வந்த ஸ்டாலின் அவரை சைபீரியாவில் உள்ள யாகுஸ்க் சிறையில் தள்ளினார். அனேகமாக 1953 காலகட்டத்தில் நேதாஜி அங்கு தூக்கிலடப்பட்டார். இது பற்றி ஜவஹர்லால் நேருவுக்கும் தெரிந்திருந்தது.

உலக யுத்தத்தின்போது பிரிட்டன் வெற்றி பெறவும், இந்திய விடுதலைக்கும் நேதாஜியின் பங்களிப்பு மிகவும் முக்கிய மானதாகும். எனவே அவரின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நம் அரசிடம் உள்ள ரகசிய‌ ஆவணங்களை பொதுவெளிக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் அவ்வாறு ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தால் அது பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் தற்போது இந்தி யாவுக்கு உள்ள உறவு பாதிக்கப் படும். எனவே ஆவணங்களை வெளியிடுவதில் உள்ள சாதக பாதகங்களை உணர்ந்த பிறகே எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நேதாஜி மாயமடைந்த விவகாரம் குறித்து 41 ஆவணங்கள் அரசிடம் உள்ளன என்று மத்திய அரசு கூறியதோடு அதில் இரண்டு ஆவணங்களை மட்டும் பொதுவெளிக்குக் கொண்டு வந்தது. மீதமுள்ள ஆவணங்களை வெளிப்படுத்த அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x