Last Updated : 09 Jan, 2017 09:02 PM

 

Published : 09 Jan 2017 09:02 PM
Last Updated : 09 Jan 2017 09:02 PM

நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்: குடியரசுத் தலைவருக்கு மம்தா வலியுறுத்தல்

பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு எனும் பெரும் இன்னல்களிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் தலைவர் குடியரசுத் தலைவர்தான். அரசு தன் இஷ்டப்படி முடிவுகளை எடுத்து நாட்டை சீரழிவுக்கு இட்டுச்செல்வதை இந்திய அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுபவரான குடியரசுத்தலைவர் தடுக்க வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

வறட்சி தொடங்கி விட்டது. வறட்சியின் தொடக்கத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனவே மக்களைக் காப்பாற்றுங்கள். மக்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால் எதுவும் நடக்காது” என்று கொல்கத்தாவில் மண் திருவிழாவில் அவர் தெரிவித்தார்.

மேலும் பணமதிப்பு நீக்கத்துக்கான போராட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்த மம்தா, “இது கஷ்டம்தான், ஆனால் பூனைக்கு யாராவது மணிகட்டியாக வேண்டும். திரிணமூல் இதனைச் செய்யும்.

எதிர்ப்புப் போராட்டத்தினால் நம் மீது ஏற்படும் கடினப்பாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

முன்னதாக பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக ஒற்றைக்குரலாய் போராடி வரும் மம்தா தொடர் ட்வீட்களில், “கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் பணமதிப்பு நீக்கத்தினால் லட்சக்கணக்கானோர் கஷ்டப்படுகின்றனர்.

மோடிபாபுவின் வெட்கங்கெட்ட தோல்வியடைந்த நாடகத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

பணமதிப்பு நீக்கத்தை எதிர்ப்பதற்காக எங்கள் கட்சியின் தலைவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். மத்திய அரசு மத்திய புலனாய்வுக் கழகத்தை (சிபிஐ) சதி உருவாக்க கழகமாக மாற்றிவிட்டனர் (conspiracy Bureau of India)

நாங்கள் இதற்கெல்லாம் அசருபவர்கள் அல்ல. மோடிபாபு எங்கள் அனைவரையும் சிறையில் தள்ளலாம், மக்களுக்காக பேசுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.

வங்காளத்திலிருந்து ஒடிஷாவுக்கோ, டெல்லிக்கோ, உத்தரப்பிரதேசத்துக்கோ எங்களை அவர்கள் கொண்டு சென்றாலும் பிரச்சினையல்ல, ஒவ்வொரு இடமும் எங்கள் நாடுதான். ஆனால் மக்கள் கொந்தளித்தால் மோடிபாபு எங்கு செல்வார்? சிறிய தலைவர்களெல்லாம் பெரிதாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இங்குதான் இருப்பார்கள் ஆனால் அவர்கள் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, லண்டன் என்று பறந்து விடுவார்கள்.

இவ்வாறு ட்வீட் பதிவிட்டுள்ளார் மம்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x