Last Updated : 15 Apr, 2016 02:59 PM

 

Published : 15 Apr 2016 02:59 PM
Last Updated : 15 Apr 2016 02:59 PM

நாட்டின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மிகக் குறைவு: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

நாட்டின் 91 முக்கிய, பெரிய, நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் அதன் கொள்திறனைக் காட்டிலும் மிக மிகக்குறைவாக உள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு கண்காணிப்பு அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க மத்திய நீர்வள ஆணையம் நாட்டில் உள்ள மிகமுக்கியமான 91 நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவை கணக்கெடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கங்களின் நீர்க்கொள்ளளவு திறன், அதாவது லைவ் ஸ்டோரேஜ் திறன் 157.999 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகும்.

‘லைவ் ஸ்டோரேஜ்’ என்பது வெள்ளக் கட்டுப்பாடு, மின் உற்பத்தி, மற்றும் நீர் திறந்து விடுதல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்க அளவைக் குறிப்பதாகும். இந்நிலையில் ஏப்ரல் 13-ம் தேதி மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் லைவ் ஸ்டோரேஜ் நீரின் அளவு 35.839 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த லைவ் ஸ்டோரேஜ் திறனில் இது 23% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை என்பதால் நீர்த்தேக்கங்களில் இருப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கும் போது, 2016-ல் பருவமழை இயல்பு நிலையை விடவும் அதிகமிருக்கும் என்று கூறியிருப்பதால் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜாராத் உள்ளிட்ட மேற்குப் பகுதியில் லைவ் ஸ்டோரேஜ் மட்டம் 27 நீர்த்தேக்கங்களில் 18% மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டு இது 36% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெற்குப் பகுதி நிலவரமோ இன்னும் மோசமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள 31 நீர்த்தேக்கங்களில் லைவ் ஸ்டோரேஜ் அளவு 15% ஆக மிகவும் குறைந்துள்ளது. உண்மையில் கூற வேண்டுமெனில் மகாராஷ்டிராவில் 3, ஆந்திரா, தெலுங்கானாவில் தலா 1 நீர்த் தேக்கங்களில் நீர் இல்லை என்பதே தற்போதைய நிலவரம்.

மொத்தத்தில் 91 முக்கிய நீர்த் தேக்கங்களில் 74 நீர்த்தேக்கங்களில் கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீரின் அளவை விட மிகக் குறைவாக நீரின் அளவு உள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா, மத்திய பிரதேசம் நீங்கலாக, பிற 16 மாநிலங்களில் உள்ள இந்த முக்கிய நீர்த்தேக்கங்களில் இயல்புக்கும் குறைவான நீரின் அளவே உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x