Last Updated : 13 May, 2015 11:26 AM

 

Published : 13 May 2015 11:26 AM
Last Updated : 13 May 2015 11:26 AM

நாடாளுமன்றம் கேட்கத் தவறிய ஒரு பெண்ணின் அழுகுரல்

நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் பெண் ஒருவர் கடந்த 6 மாத காலமாக தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார் அளிக்க முடியாமல் தவித்து வருவது அம்பலமாகி உள்ளது.

நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் தன்னை தனது துறை மேற்பார்வையாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பதே அந்தப் பெண்ணின் புகார்.

அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை பொறுப்புணர்வுடன் 'தி இந்து' மறைக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பி.வி.ஜி. இந்தியா லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனம் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. பி.வி.ஜி. நிறுவனமே அந்தப் பெண்ணை நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது பணியமர்த்தியுள்ளது. 2013 முதல் அவர் அங்கு பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றும் குறிப்பிட்ட பகுதிக்கு புதிய மேற்பார்வையாளராக கடந்த 2014-ல் ஆண் ஒருவர் வந்து சேர்ந்தார்.

அதற்குப் பின் நேர்ந்ததை அந்தப் பெண் 'தி இந்து'-விடம் விவரித்தார்.

"நான் கழிப்பறைகளை சுத்தம் செய்ய செல்லும்போதெல்லாம் அவர் என்னைப் பின் தொடர்ந்து வருவார். அநாகரிகமாக பேசுவார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டுவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவரது அறைக்குச் சென்றேன். கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கான ரசாயனப் பொருட்கள் தீர்ந்து விட்டன. புதிதாக தருமாறு கேட்டேன். அதற்கு அந்த மேற்பார்வையாளர், "பதிலுக்கு நீ என்ன தருவாய்" என்றார்?" பதிலுக்கு கழிப்பறையை சுத்தம் செய்யும் என் கடமையை ஒழுங்காகச் செய்வேன் என்றேன். "அது தவிர நீ கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது" என்றார். நான் அவரை வன்மையாகக் கண்டித்தேன். இப்படி எல்லாம் பேசக் கூடாது என எச்சரித்தேன். அதற்கு அவர் என்னை பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டினார்.

மற்றொரு முறை நான் துப்புரவுப் பணி மேற்கொண்டிருந்தபோது அங்கே வந்த அந்த நபர் "நீ குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் போது உன் உடலை பார்க்க முடிகிறது" என மிகவும் ஆபாசமாக பேசினார். நான் இது குறித்து என்னுடன் வேலை செய்யும் மூத்த பெண் ஊழியரிடம் தெரிவித்தேன்" என்றார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சரியாக கடந்த ஆண்டு இறுதியில், அந்த மேற்பார்வையாளர் சம்பந்தப்பட்ட பெண்ணின் நாடாளுமன்ற நுழைவுச் சீட்டை பறிமுதல் செய்துள்ளார்.

இது குறித்து டெல்லி கனோட் பிளேஸில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவித்திருக்கிறார் அப்பெண். அதனையடுத்து, அவருக்கு மக்களவையில் துப்புரவுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை பணியிட மாற்றம் செய்தது அவருக்கு மேலும் மன உளைச்சலை அளித்திருக்கிறது. தனது உள்ளக் குமுறலை யாரிடம் சொல்வது என பரிசீலித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக அவர் அளித்த புகார் விளைவாக அவருக்கு கிடைத்தது ஏளனப் பேச்சுகள் மட்டுமே.

ஏப்ரல் 2015-ல், பிவிஜி நிறுவனம் அந்தப் பெண்ணை அழைத்து மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்குவதாகக் கூறினார்.

மேலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளாரையும் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால், இதுநாள் வரை அந்த மேற்பார்வையாளர் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

இது தொடர்பாக 'தி இந்து' சார்பில் பிவிஜி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதிலளிக்க பி.வி.ஜி. நிறுவனம் மறுத்துவிட்டது.

கடைசியாக, கடந்த ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். மே 8-ல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 509-ன் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

மக்களவை செயலகத்தில், பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு உறுப்பினர் ஒருவரிடம், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகாரை ஏன் நீங்கள் ஏற்கக்கூடாது என்று கேட்டபோது, "ஒப்பந்த ஊழியர்கள் புகாரை ஏற்பதற்கு வழிவகைகள் இல்லை" என்றார்.

தொடர்ந்து 'தி இந்து' சார்பில், மக்களவை செயலகத்தின் புகார் கேட்கும் குழுவின் முன்னிலை அதிகாரி ராஷ்மி ஜெயினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவரும் உரிய பதில் அளிக்கவில்லை.

இப்பிரச்சினை தொடர்பாக கருத்து கேட்பதற்காக, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட நிறைய பேரது வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை 'தி இந்து' தொடர்பு கொண்டது. அப்போது அவர், "தனியார் நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் பெண்கள் இது மாதிரியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால், அவர்கள் புகாரை அரசு அங்கமே கவனிக்க வேண்டும். சொல்லப்போனால் இந்த பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு இல்லை, முற்றிலும் அரசிடமே இருக்கிறது" என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் 'தி இந்து'விடம் இறுதியாக கூறும்போது, "நான் என் உரிமைகளுக்காக போராட விரும்புகிறேன். என் குழந்தையைப் பராமரிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இந்நிலையில் என் பணிக்கு பாதுகாப்பு இல்லாமல் போனால் அது இன்னமும் சிக்கலாகும்" என்றார்.

இது குறித்து அப்பெண்ணின் வழக்கறிஞர் மோனாலிசா கூறும்போது, "பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை பரிசீலிக்கும் குழு நாடாளுமன்றத்தில் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தன் வேலையை காப்பாற்றிக் கொள்ளக்கூட இங்கு வழியில்லாமல் இருக்கிறது" என்று வேதனை தெரிவித்தார்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x