Last Updated : 16 Mar, 2017 01:12 PM

 

Published : 16 Mar 2017 01:12 PM
Last Updated : 16 Mar 2017 01:12 PM

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் மனோகர் பாரிக்கர்

கோவாவில் பாஜக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "கோவாவின் முதல்வராக பதவி ஏற்ற மனோகர் பாரிக்கர் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.

22 எம்எல்ஏக்கள் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவாகவும், 16 எம்எல்ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, "நாங்கள் எங்கள் பெரும்பான்மையை இந்திய மக்கள் முன்னால் நிரூப்பித்து இருக்கிறோம். எம்எல் ஏக்கள் அனைவரும் தாமாக முன்வந்து ஆதரவு அளித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் கூறுவது போல எம்எல்ஏக்கள் ஓட்டல் அறைகளில் தங்கவைக்கப்பட்டு வலுக்கட்டாயப்படுத்தி எங்களுக்கு வாக்களிக்கவில்லை" என்றார்.

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளைக் கைப்பற்றின. இவை தவிர 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்றால் ஆதரவு அளிக்கத் தயார் என்று மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சர்ச்சிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தார்.

இதனையடுத்து சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடம் கோவாவில் பாஜக ஆட்சி அமைத்தது.

இந்தநிலையில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா பாஜக-வின் மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தது அதிகார துஷ்பிரயோகம் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்.

ஆனால், இந்தப் பிரச்சினையை தீர்க்க நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்தது என்று முடிவெடுத்த உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்து மனோகர் பாரிக்கர் முதல்வராக அனுமதி அளித்து மார்ச் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x