Published : 15 Jun 2016 08:24 AM
Last Updated : 15 Jun 2016 08:24 AM

திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ.7.5 கோடியில் அரிசி கொள்முதல்: தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

அன்னதான திட்டத்துக்கு ரூ. 7.5 கோடிக்கு 15.30 லட்சம் கிலோஅரிசி வாங்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சதலவாடா கிருஷ்ணமூர்த்தி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதியில் உள்ள தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் கட்ட ரூ. 4.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலிபிரியில் உள்ள மாதிரி ஏழுமலையான் கோயில் அருகே தேவஸ்தான ஊடகத்துக்காக ரூ. 14.5 கோடி செலவில் ஸ்டுடியோ அமைக்கப்படும்.

பிரசாதத்திற்காக ரூ.25 கோடியில் 3.75 லட்சம் கிலோ முந்திரி பருப்பு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 6 மாதங்களுக்கு செலவிடப்படும். அன்ன பிரசாதத்திற்காக ரூ. 7.5 கோடி செலவில் 15.30 லட்சம் கிலோ உயர்ரக அரிசி வாங்கப்படும்.மேலும் ரூ.3.99 கோடி செலவில் 36,000 கிலோஏலக்காய், ரூ. 56 லட்சம் செலவில் 35ஆயிரம் கிலோ உளுத்தம் பருப்பு, ரூ.1.64 கோடி செலவில் வெல்லம், ரூ.1.61 கோடி செலவில் 70 லட்சம் பிளேடுகள் வாங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பக்தர்களின் முடி காணிக்கைகளை ஏலம் விட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ. 5.71 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x