Last Updated : 14 Mar, 2015 09:28 AM

 

Published : 14 Mar 2015 09:28 AM
Last Updated : 14 Mar 2015 09:28 AM

தற்கொலைப்படையின் நிறுவனர் ஜகியுர் ரஹ்மான் லக்வி

பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் காஷ்மீரப் பகுதியின் தலைமை கமாண்டராக இருப்பவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி. அந்நாட்டு தீவிரவாதிகளின் முக்கியப் பயிற்சியாளரான இவர் தான் இந்தியாவிற்கு எதிராக தற்கொலைப் படையினரை உருவாக்கியவர் ஆவார்.

மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற லக்வீ தனது 48 ஆவது வயது வரை ஆப்கானிஸ்தானை ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்ற போரிட்ட ’முஜாகித்தீன்’ என அழைக்கப்படும் போராளிகள் படைகளுக்கு முக்கிய ஆயுதப் பயிற்சியாளராக இருந்தவர். இதன் இளைஞர்களால் ‘சாச்சு (சித்தப்பா)’ என செல்லமாக அழைக்கப்பட்டவருக்கு உலகின் அனைத்து வகையான ஆயுதப் பயிற்சிகளும் அத்துபடி எனக் கருதப்படுகிறது.

வஹாபி இயக்கத்தை பின்பற்றிய குடும்பம்:

லக்வியின் தந்தையான ஹாபீஸ் அஜுஸ் உர் ரஹிமான் நம் நாட்டின் சுதந்திர போராட்டக் காலத்தில் உலக முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்த வஹாபி இயக்கத்தை சேர்ந்தவர். இந்த வஹாபி இயக்கம் என்பது உலக சன்னி முஸ்லீம்களின் ஹனபி, ஷாபை, மாலீக்கி மற்றும் ஹம்பலி ஆகிய நான்கு சித்தாந்த மையங்கள் பட்டியலில் ஐந்தாவதாகக் கருதப்பட்டு வந்தது. இந்த சித்தாந்த மையங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் துவங்கியவர் சவூதி அரேபியாவில் வாழ்ந்த தலைவரான அப்துல் வஹாப் என்பவர். இவரது பிரச்சாரம் வஹாபி் சித்தாந்த மையம் எனப்பட்டது. வஹாபியின் ஒரு பிரிவான ’ஜமாத் அஹெலே ஹதீஸ்’ எனும் இயக்கத்திற்காக பாடுபட்டவர் லக்வீயின் தந்தை. உலகில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானாவர்கள் வஹாபி சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் எனக் கருதப்படுகிறது.

லக்வியின் குடும்பம்:

டிசம்பர் 30, 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தின் ஒகாரா மாவட்டத்தில் பிறந்தவர் லக்வி. இவர் தம் தந்தையை போலவே தம் ஈராக்கியர்களுக்கு ஆதரவாக பணி செய்யத் துவங்கி, ஆப்கானிஸ்தானின் தாலிபான்களின் ஆதரவு தீவிரவாதியாக மாறினார். இவரது குடும்பம் மும்பாய் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப்பின் வசித்த பஞ்சாப் மாவட்டத்தில் ரெய்னாலா குர்த் பகுதியில் வசித்து வந்தது. லக்வியின் மகன்களான அபு கத்தல் மற்றும் அபு காசீம் ஆகிய இருவரும் அவரது வழியையே பின்பற்றினர். இவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற போது இந்திய ராணுவத்தினரால் முறையே 2003 மற்றும் 2005-ல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பின்லாடன் தொடர்பு:

லக்வியின் சகோதரியுடன் அரபு நாட்டை சேர்ந்த அபு அப்துர் ரஹிமான் சரீஹி எனும் செல்வந்தருடன் மணமானது. அதன் பிறகு தான் லக்வீ, பாகிஸ்தானில் போராளிகள் எனப்படும் தீவிரவாதிகள் உலகில் பிரபலமானார். இவரது சகோதரியின் கணவரான சரீஹி, சர்வதேச தீவிரவாத இயக்கம் அல் கெய்தாவின் நிறுவனரான ஒசாமா பின் லாடனின் நம்பிக்கைக்கு உரிய சகாக்களில் ஒருவர். சரீஹி அளித்த பத்து மில்லியன் நன்கொடையில் தான் முரீத்கேவில் உள்ள லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைமையகம் 1988-ல் கட்டப்பட்டது. அதேவருடம் சரீஹி, ஆப்கானிஸ்தானின் குனார் பள்ளத்தாக்கில் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் இளைஞர்களுக்காக அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஒரு பயிற்சி முகாமை துவக்கினார். ரஷ்யப் படைகளை எதிர்த்த அந்த படைகளின் பயிற்சியாளராக லக்வீ முதன் முதலாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தீவிரவாதிகளின் மௌலானா:

கார்கில் போருக்கு பின், கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரீத்கே எனும் இடத்தில் ஒருமுறை மூன்று நாட்களுக்காக முஸ்லீம் மௌலானாக்கள் கருத்தரங்கு நடந்தது. லஷ்கர்-எ-தொய்பாவின் தலைமையகத்தில் நடந்த அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட லக்வீ, முதன் முறையாக இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையாகப் பேசினார். அதில் அவர், கார்கில் போரில் தோல்வியால் காஷ்மீர் மக்களின் மன உறுதியை வளர்க்கும் பொருட்டும், அப்போரின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறியதுடன் அங்கு தற்கொலைப் படைகள் அனுப்புவது அவசியம் என வலியுறுத்தினார். அங்கு சில செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்த லக்வீ, இந்தியாவுடன் மற்றும் ஒரு போர் தவிர்க்க முடியாதது எனவும், தமது அடுத்த குறி புதுடெல்லி எனவும் வெளிப்படையாக அறிவித்தார். தாம் கூறியது போலவே, 2001-ல் புதுடெல்லி நாடாளுமன்றம் மீது லஷ்கர்-எ-தொய்பாவின் தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்கொலைப்படையின் நிறுவனர்:

காஷ்மீர் விவகாரம் உட்படப் பல பிரச்சனைகளில் இந்தியாவிற்கு எதிராக லக்வீ வெளிப்படையாக பேசியதால் அவருக்கு, பாகிஸ்தானியர்களுக்கு மத்தியில் அதிக முக்கியத்துவம் கிடைக்கத் துவங்கியது. இதை ஆதாயமாக கொண்டு லக்வீ, தீவிரவாத செயல்களுக்காக வேண்டி முதன் முதலாக பாகிஸ்தானில் தற்கொலைப் படையினரை உருவாக்கத் துவங்கினார். 2006 ஆம் ஆண்டு முதல் லஷ்கர்-ஏ-தொய்பாவின் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதும், தற்கொலைப்படையினருக்காக அப்பாவி இளைஞர்களை தேர்ந்தெடுப்பதும் லக்வீயின் பணியாக இருந்தது. இத்துடன், தாம் 2008-ல் கைது செய்யப்படும் வரை, கொல்லப்பட்ட தற்கொலைப்படையினரின் விதவைகள் மற்றும் குடும்பத்தினரையும் ஆதரவளித்து பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தார் லக்வி.

இதனால், பாகிஸ்தானிய மதவாதிகள் இடையே லக்வீக்கு மேலும் புகழ் கிடைத்தது.

லக்வி கைது பின்னணி:

லக்வி உருவாக்கியத் தற்கொலைப்படையினர் நடத்தியதில் முக்கியமானது, கடந்த நவம்பர் 11, 2008-ல் லஷ்கர்-எ-தொய்பாவினர் மும்பாயில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஆகும். இதில் உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியான அகமது அஜ்மல் கசாப்பின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் அளித்து லக்வீ அவனை தாக்குதலுக்கு தயார்படுத்தி இருந்தார். இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் தீவிரவாத பயிற்சி முகாமில் சோதனை நடத்தி பாகிஸ்தான் ராணுவம், லக்வீ உட்பட 12 பேரை கைது செய்தனர். இந்த கைதுக்கு பின் லக்வீ சிறையில் இருப்பதாகவும் அவர் மீது மும்பாய் தாக்குதல் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கடந்த 2009-ல் பாகிஸ்தான் முதன் முறையாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. நவம்பர் 25, 2009-ல் லக்வீ உட்பட ஏழு தீவிரவாதிகள் மும்பாய் தாக்குதலுக்கு காரணம் என அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, டிசம்பர் 18, 2014-ல் பெஷாவாரின் பள்ளிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இருதினங்கள் கழித்து லக்வீ ஜாமீனில் விடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவரது ஜாமீன் மனு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் லக்வீ மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

ஜிகாத் பிரச்சாரம்:

சர்வதேச தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள லஷ்கர்-ஏ-தொய்பா, பாகிஸ்தானில் ஒரு தொண்டு நிறுவனம் போல் கருதப்படுகிறது. இதன் சார்பில் பல போஸ்டர்கள் பாகிஸ்தானின் பல முக்கிய பகுதிகளின் கிராமங்களில் ஒட்டப்படுவது வழக்கமான ஒரு விஷயம். திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இந்த அமைப்பினர் வந்து நின்று கொண்டு, ‘ஜிகாத்‘ பிரச்சாரம் செய்வதும் சாதாரணமான விஷயம். பல முக்கிய நகரங்களின் கடைகள் மற்றும் தெரு முனைகளில் நிதி உதவி கோரும் பெட்டிகளும் சாதாரணமாக வைக்கப்படுவது உண்டு எனக் கூறப்படுகிறது. இதில், அனுதினம் குவியும் கணக்கில் இல்லாத ஏராளமானப் பணம், இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற தீவிரவாத அமைப்பினர் மீது அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு ஒரு முறை, பாகிஸ்தான் அதிபர் பர்வேஜ் முஷ்ரப்பிற்கு வந்தது. ஆனால், அவர் தீவிரவாத அமைப்புகள் அனைத்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீருக்கு மாற்றினார். எனினும், இவர்கள் மெல்ல மீண்டும் பாகிஸ்தானில் செயல்பாடுகளை ஆரம்பித்து செயல்படத் துவங்கி விட்டனர். இதன் முக்கிய அமைப்புகளில் ஒன்றான லஷ்கர்-ஏ-தொய்பாவின் காஷ்மீர் பகுதியின் தலைமை கமாண்டராக இருப்பவர்தான் ஜகியுர் ரஹ்மான் லக்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x