Last Updated : 08 Dec, 2016 09:00 AM

 

Published : 08 Dec 2016 09:00 AM
Last Updated : 08 Dec 2016 09:00 AM

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பாதிக்காது: சட்ட நிபுணர்களின் அலசல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் அவர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பாதிக்கப்படாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த தாக வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெய லலிதா தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெய லலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்தது.

இதை எதிர்த்து க‌ர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி கள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட‌து. இந் நிலையில் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாதிக்கப் படுமா? என கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ‘தி இந்து'விடம் கூறியதாவது:

ஜெயலலிதா காலமானதால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து விடாது. இவ்வழக்கில் முதல் குற்றவாளி யாக குற்றம்சாட்டப்பட்ட ஜெய லலிதாவை தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய குற்றம்சாட்டப்பட்ட வர்கள் உயிரோடு உள்ளனர். எனவே அனைத்துவித விசாரணையும் முடிந்துள்ள நிலையில் உச்ச நீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கும்.

மொத்தத்தில் ஒரு வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு இருந்தால், அவர் இறந்த பிறகு வழக்கு முடித்து வைக்கப்படும். ஆனால் இவ்வழக்கில் ஜெயலலிதா மட்டுமே காலமானதால் சசிகலா உள்ளிட்ட மூவரும், தனியார் நிறு வனங்களின் நிர்வாகிகளும் உயிரோடு இருப்பதால் வழக்கு தொடர்ந்து நடைபெறும். எக்காரணம் கொண்டும் வழக்கு முடித்து வைக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டுசதி இருக்கிறதே

இவ்வழக்கின் மூன்றாம் தரப் பான திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, “ஜெய லலிதாவின் மறைவால் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக் கும் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. வழக்கம் போல தீர்ப்பு அறிவிக்கப்பட்டால் ஜெய லலிதாவை தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் சட்டத் துக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஏனென்றால் நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளும் முடிந்துள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துள்ளார். மற்ற குற்றம்சாட்டப்பவர்கள் உயிரோடு இருப்பதால் வழக்கு முடித்து வைக் கப்பட மாட்டாது.

இவ்வழக்கில் பொது ஊழிய ரான ஜெயலலிதா, மூவருடன் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து குவித்தார் என குற்றம் சாட்டப்பட் டுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சசிகலா உள்ளிட்ட மூவரும் பினாமி யாக செயல்பட்டுள்ளனர் என்பதை விசாரணை நீதிமன்றம் உறுதி செய் துள்ளது. இவ்வழக்கில் ஜெய லலிதா உள்ளிட்ட நால்வரும் சமமாக குற்றம் புரிந்ததால்தான் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. பொது ஊழியரான ஜெய லலிதா தனது கடமையிலிருந்து தவறியதாலேயே அவருக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக் கப்பட்டது. எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் புரிந்த குற்றத்தை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்தாலும், வழக்கை முடித்து வைக்க முடியாது. இறந்த பின்பும் மற்ற வர்களுக்கு பாடம் புகட்டும் வகை யில் சட்டப்படி தண்டனை அறிவிக் கப்பட்ட வழக்குகளும் இருக்கிறது” என்றார்.

நீதிமன்றம் முடிவு செய்யட்டும்

இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்ட போது, “பொதுவாக ஒரு வ‌ழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இற‌ந்துவிட்டால் குற்றவியல் நடை முறை சட்டப் பிரிவு 394-ன் படி வழக்கு கைவிடப்படும். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெய லலிதா இறந்து, மற்றவர்கள் உயிரோடு இருப்பதால் அந்த சட்டம் பொருந்துமா என்பது சந்தேகம் தான். ஏற்கெனவே கர்நாடக உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் நால்வரை யும் விடுவித்ததால் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பே தேவையில்லை.

அதேநேரம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா உயிரோடு இருந்து, வழக்கை முழுமையாக நடத்தியுள் ளார். அனைத்து விதமாக விசார ணையும் முடிந்து தீர்ப்பு மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை வெறுமனே முடித்து வைக்க முடியாது. எதுவாக இருந்தா லும் அதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்யும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x