Last Updated : 26 Feb, 2016 08:25 AM

 

Published : 26 Feb 2016 08:25 AM
Last Updated : 26 Feb 2016 08:25 AM

தமிழகத்துக்கு முக்கிய அறிவிப்பு இரண்டு மட்டுமே

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இரண்டு மட்டுமே வெளியாகி உள்ளன. புறநகர் ரயில் வளர்ச்சியில் பங்குதாரராக தமிழக அரசு சேர்க்கப்படும், சென்னை புறநகர் பகுதியில் உற்பத்தியாகும் வாகனங்களை ரயில் மூலம் அனுப்ப ‘ஆட்டோ ஹப்’ எனப்படும் வாகன மையம் அமைக்கப்படும் என்பதே இவையாகும்.

இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கையில் “ரயில்வே துறையில் முக்கிய வளர்ச்சியாக, புறநகர் ரயில் உள்கட்டமைப்பில் புதிய முதலீடுகளில் பங்களிப்பு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மீதான விரிவான கொள்கை இன்னும் 4 மாதங்களில் வகுக்கப் படும். இதன்படி அகமதாபாத், ஹைதராபாத், சென்னை ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த முறையே குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பங்குதாரர்களாக சேர்க்கப்படும். இதன் மூலம் புதுமையான முதலீட்டு நடைமுறை உருவாக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

புறநகர் ரயில்களில் பயணிகளின் நெரிசலை தவிர்க்க மாநில அரசுகள் அலுவல் நேரங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் முதல் வாகன மையம்

நாட்டின் முதல் வாகன மையம் அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தயாரிக்கப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கலாம். நாட்டில் போதிய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல நேரங்களில் முக்கிய நுகர்வோர்களை ரயில்வே இழக்க நேரிடுகிறது. இந்நிலையில் தனியாருடன் இணைந்து சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்படும் எனவும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற 10 கிடங்குகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘டிரான்ஸ்லோக்’ நிறுவனம் மூலமாக வரும் நிதியாண்டில் அமைக்கப்படும். இது சரக்கு ரயில் போக்குவரத்தை ஈர்க்கும்படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்துறை அமைக்க உள்ள சேமிப்பு கிடங்குகளின் கூடுதல் வசதியாக குளிர்சாதன சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் 3 மாதங்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம், தமிழகமும் பயன்பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

புதிய சரக்கு ரயில் பாதை

புதிய சரக்கு ரயில் பாதைகளில் நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். இதே வகையில் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் கரக்பூருக்கும், பின்னர் கரக்பூரில் இருந்து கிழக்கு கடற்கரை நகரங்களை இணைக்கும் வகையில் விஜயவாடாவுக்கும் புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த மூன்று திட்டங்களும் அதிக முன்னுரிமை அளித்து தனியாருடன் இணைந்து உருவாக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x