Last Updated : 06 Apr, 2015 11:15 AM

 

Published : 06 Apr 2015 11:15 AM
Last Updated : 06 Apr 2015 11:15 AM

தபால் துறை விநியோகிக்கும் ஒரு தபால் அட்டைக்கு ரூ.7 நஷ்டம்: உள்நாட்டு கடிதத்துக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறது

இந்திய தபால் துறை விநியோகிக்கும் ஒரு தபால் அட்டைக்கு ரூ.7, உள்நாட்டு கடிதத்துக்கு ரூ.5 நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறையின் ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தபால் துறைக்கு கணிசமான அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

இந்திய தபால் துறையின் கடந்த 2013 - 14-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு தபால் அட்டையின் அடக்க விலை 753.37 காசுகள். அதாவது ரூ.7.53 காசுகள். ஆனால், தபால் அட்டையில் வரும் வருவாய் வெறும் 50 காசுகள்தான். அதேபோல் உள்நாட்டு கடிதத்தின் (இன்லேண்ட் லெட்டர்) அடக்க விலை 748.39 காசுகள். அதாவது ரூ.7.48 காசுகள். ஒரு கடிதத்தில் வரும் வருவாய் ரூ.2.50.

பல தரப்பில் போட்டிகள் இருந்தும் தபால் துறையின் பல பிரிவுகள் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சரக்கு அஞ்சல், பதிவு, விரைவு தபால், காப்பீடு, பணவிடை, பத்திரிகைகள் பட்டுவாடா, புக் போஸ்ட், போஸ்டல் ஆர்டர் போன்ற எல்லா சேவைகளுக்கும் அடக்க விலையை விட மிகக் குறைந்த வருவாயே கிடைக்கிறது.

கடந்த 2013 - 14-ம் ஆண்டு தபால் துறையின் பற்றாக்குறை ரூ.5,473.10 கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டு பற்றாக்குறை ரூ.5,425.89 கோடியை விட 0.87 சதவீதம் அதிகம். சிறுசேமிப்பு, சேமிப்பு சான்றுகள் மூலம் கடந்த 2013 - 14-ம் ஆண்டில் ரூ.10,730.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவீனம்16,796.71 கோடி ரூபாயாக உள்ளது. எனினும், மற்ற அமைச்சகங்கள், துறைகள் மூலம் 593.19 கோடி ரூபாயை தபால்துறை பெற்றது.

அதனால் பற்றாக்குறை ரூ.5,473.10 கோடி அளவுக்கு குறைந்தது. இவ்வாறு தபால் துறை ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x