Published : 21 May 2015 08:31 AM
Last Updated : 21 May 2015 08:31 AM

தன்பாலின உறவாளர் மகனுக்கு வரன் தேடும் தாய்: நாட்டிலேயே முதன்முறையாக விளம்பரம் வெளியீடு

எந்த ஒரு தாயும் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமானதுதான். ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு தாய், தனது மகனுக்கு பொருத்தமான மணமகன் வேண்டும் என்று விளம் பரம் செய்துள்ளார். ஆம் அவரது மகன் தன்பாலின உறவாளர் என்பதுதான் அதற்குக் காரணம்.

மும்பையைச் சேர்ந்த பத்மா அய்யரின் (58) மகன் ஹரீஷ் அய்யர் (36). தன்பாலின உறவாளரான இவர், மும்பையின் தன்பாலின உறவாளர், திருநங்கைகள் (எல்ஜிபிடி) வட்டாரத்தில் மிகவும் பரிச்சயமானவர். ‘யுனைடெட் வே ஆப் மும்பை’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். தன்பாலின உறவாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இவர் அடிக் கடி செய்திகளில் வருவார்.

இந்நிலையில், பத்மா அய்யர் நேற்று முன்தினம் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், “தன்னார் வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் எனது மகன் ஹரீஷ் அய்யருக்கு 25 முதல் 40 வயதுள்ள, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய, விலங்கு மீது அன்பு செலுத்தும், சைவ உணவுப் பழக்கம் கொண்ட மணமகன் தேவை. ஜாதி தடையில்லை (அய்யருக்கு முன் னுரிமை)” என கூறப்பட்டுள்ளது.

இதில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் தினமும் வெளியாகும் பல்லாயிரக்கணக்கான திருமண விளம்பரங்களைப் போலவே உள்ளன. ஆனால், தன்பாலின உறவாளர் மணமகனுக்கு அதே இன மணமகன் தேவை என்று அவரது தாயே விளம்பரம் செய்திருப்பதுதான் சிறப்பு.

இந்தியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி இருப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தைப் பாராட்டியும் குற்றம்சாட்டியும் சமூக இணையதளங்களில் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பத்மா கூறும் போது, “தன்பாலின உறவாளர் மகனைப் பெற்றவள் என்ற வகை யில்தான் நான் விளம்பரம் கொடுத் துள்ளேன். மற்ற பெற்றோருக்கு தங்களுடைய மகன் மீது எத்தகைய கவலை இருக்குமோ, அதே கவலைதான் எனக்கும். எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை முடிவதற்குள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன். இதில் என்ன தவறு?” என்றார்.

இதற்கிடையே, இந்த விளம்பரத்தைப் பார்த்து சிலர் ஹரீஷை தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் விரைவில் ஹரீஷுக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுத்து விடலாம் என்று பத்மா நம்பிக்கையுடன் உள்ளார்.

இதுகுறித்து ஹரீஷ் கூறும் போது, “எனக்கு பொருத்தமானவர் அடையாளம் காணப்பட்ட உடன், அனைத்து மதத்தினரும் பின்பற்றும் சடங்குகளுடன் திருமணம் செய்துகொள்வேன்” என்றார்.

அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்ட தன்பாலின உறவாளர் தம்பதி

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்

பெங்களூரைச் சேர்ந்த ரிச்சாவும், ஷிவானியும் கடந்த 10 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். தன்பாலின உறவாளர்களான இவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் நம் நாட்டு சட்டப்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே, இவர்கள் அமெரிக்காவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.

அதன்படி ரிச்சாவும், ஷிவானியும் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றனர். இவர்கள் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சிட்டி ஹாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிரம் மாற்றி கொண்டு சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x