Last Updated : 11 Mar, 2017 10:31 AM

 

Published : 11 Mar 2017 10:31 AM
Last Updated : 11 Mar 2017 10:31 AM

டெல்லி பாஜக அலுவலகத்தில் கோலாகலம்: உபி, உத்தராகண்டில் வெற்றிமுகம் பெற்றதால் உற்சாகம்

டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் கோலாகலம் துவங்கி விட்டது. உபி, உத்தராகண்டில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்கும் அளவிலான முன்னிலை கிடைத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

டெல்லியின் மத்தியப்பகுதியான அசோகா சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு விடியற்காலை முதல் பாஜக தொண்டர்கள் குவியத் துவங்கி விட்டனர். அலுவலகத்தின் முன்பாக வாசலில் பெரிய அளவிலான எல்இடி திரை அமைத்து அதற்கு தொலைக்காட்சி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், முடிவுகளின் முன்னிலை நிலவரம் கண்டு பாஜகவினர் கோலாகலக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.

’ஜெய் ஸ்ரீராம்!’, ’ஹர் ஹர் மோடி!’, ’பாஜக ஜிந்தாபாத்’ என கோஷமிடத் துவங்கி உள்ளனர். காலை 10 மணி அளவில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரம் தெரிந்து விட்டது. இதில், உபி மற்றும் உத்தராகண்டில் பாஜகவின் வெற்றிமுகம் வெளியாகத் துவங்கி உள்ளது. பாஜகவிற்கு உபியில் 282 மற்றும் உத்தராகண்டில் 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

உபியில் சமாஜ்வாதி - காங்கிரஸுக்கு உபியில் 77 மற்றும் பகுஜன் சமாஜுக்கு 26-ல் முன்னிலை தெரிகிறது. உத்தராகண்டில் காங்கிரஸ் 17 மற்றும் இதர கட்சிகளுக்கு 3 லும் முன்னிலை வகிக்கின்றன.

இது குறித்தி ‘தி இந்து’விடம் பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், "ஐந்து மாநில தேர்தலிலும் பிரதமர் நரேந்தர மோடியின் தீவிரப் பிரச்சாரம் அதிகப் பலனை அளித்துள்ளது. குறிப்பாக உபி, உத்தராகண்டில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி இருக்கிறது. இதற்கு மக்களவை தேர்தலில் துவங்கிய ‘மோடி மேஜிக்’ இன்னும் தொடர்வது காரணம் ஆகும்" எனத் தெரிவித்தார்.

தேர்தலின் முடிவுகளை பாஜக தலைவர்கள் தம் வீடுகளின் தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்ந்து ரசித்து வருகின்றனர். ஐந்து மாநிலங்களின் முடிவுகளும் ஓரளவிற்கு தெரியத் துவங்கிய பின் அவர்களில் ஒவ்வொருவராக பாஜக தலைமை அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x