Published : 07 Oct 2014 05:00 PM
Last Updated : 07 Oct 2014 05:00 PM

ஜெயலலிதா ஜாமீன் வழக்குத் தீர்ப்பு: ஊடகச் செய்திகளில் குழப்பம் ஏன்?

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதேவேளையில், தீர்ப்பு விவரம் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என செய்திகள் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.

நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் முதலில் வாதிட்டார். பிற்பகலில் தொடர்ந்த வாதத்தின்போது, நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என்று நீதிபதியிடம் அவர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று நீதிமன்ற வளாகத்தில் எதிர்பார்ப்பு நிலவியது. இதன்பின், நீதிபதி சந்திரசேகர் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

மிக நீண்ட அந்தத் தீர்ப்பின் முற்பகுதியில் இருந்த விவரங்கள், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக, நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

அதன் எதிரொலியாக, முழு தீர்ப்பும் வாசிக்கப்படுவதற்கு முன்பே நீதிமன்ற வளாகத்தில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என்ற தவறான தகவல் பரவியது. அங்கிருந்த நிருபர்கள் அவசர அவசரமாக தங்கள் அலுவலகங்களைத் தொடர்புகொண்டு அந்தத் தவறான தகவலைப் பகிர்ந்தனர்.

அதன் எதிரொலியாக, முழுமை அல்லாத அந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. பின்னர், >'ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்' அதிகாரப்பூர்வ செய்தி வெளியானதும் குழப்பம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x