Last Updated : 20 Mar, 2015 08:56 AM

 

Published : 20 Mar 2015 08:56 AM
Last Updated : 20 Mar 2015 08:56 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-6: அன்பளிப்புக்கும் லஞ்சத்துக்கும் இடையே மெல்லிய கோடு

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக‌ இருந்தபோது அவரது மொத்த சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 396.59 ரூபாயாக இருந்தது. அப்போது வருமானம் 9 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரத்து 53.56 ரூபாய், செலவு 11 கோடியே 56 லட்சத்து 56 ஆயிரத்து 833.41 ரூபாய் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆவணங்கள் சொல்கின்றன.

இதற்கு ஜெயலலிதா தரப்பு, “1991-96 காலக்கட்டத்தில் 32 தனியார் நிறுவனங்கள், ஹைதராபாத் திராட்சை தோட்டம், பிறந்தநாள் அன்பளிப்பு மூலமாக ரூ.34.24 கோடி வருமானமாக வந்தது. வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்ட இந்த வருமானத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக ஆதாரப்பூர்வ வருமானத்தை இருட்டடிப்பு செய்துள்ளது” என சொல்கிற‌து.

“தனிநபருக்கு வரும் அன்பளிப்புகளை வருமானமாகவோ,சொத்தாகவோ கருத முடியாது என்பதால்,ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அன்பளிப்பாக வந்த பணத்தை வழக்கில் சேர்க்கவில்லை.மேலும் அன்பளிப்புகளை சட்ட‌ப்பூர்வ வருமானமாகவோ,ஆதாரப்பூர்வ வருமானமாகவோ கருத முடியாது என்பதால் அதனைப் பற்றி வழக்கு ஆவணங்களில் குறிப்பிடவில்லை''என விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜெயலலிதா தரப்பு, ‘‘தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 1992-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் பிறந்தநாள் அன்பளிப்பாக ஏராளமான பொருட்களை வழங்கினர். பிறந்தநாள் அன்பளிப்பாக 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் காசோலையாகவும் வங்கி வரைவோலையாகவும் அனுப்பினர். மேலும் வெளிநாட்டில் இருந்து டாலராக 77 லட்சத்து 52 ஆயிரத்து 59 ரூபாய் வந்தது.

இதற்கு 1993-ம் ஆண்டு ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்தார்.இதை அவரது சட்டப்பூர்வ‌ வருமானமாக ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்துக்கு தனியாக வரி விதித்தனர். அதையும் ஜெயலலிதா முறையாக செலுத்தினார்’’ என்று வாதிட்டது.

அன்பளிப்பும் லஞ்சமும் ஒன்றே

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ‘‘பிறந்த நாள் பரிசாக வந்த 2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 71 ரூபாயை வருமானமாக ஏற்கவில்லை. அன்பளிப்பாக வந்ததை வருமானமாக கருதுவது நியாயமில்லை என்பதால் இரண்டையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. ஏனென்றால் பிறந்தநாள் பரிசுகள் ஒன்றும் சட்டவிரோதமானவை அல்ல.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்பளிப்பு பணத்தை விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு உட்பட 30 அதிமுக நிர்வாகிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகள் தரப்பு சாட்சிகள் குறைந்தபட்சமாக ரூ.500-ல் இருந்து ரூ.5 லட்சம் வரை வங்கி வரைவோலை எடுத்து அனுப்பியதை ஜெயலலிதா தரப்பு நிரூபித்துள்ளது.

அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்பாக கொடுத்த பொருட்கள் உண்மை என தாக்கல் செய்துள்ள ஆதாரங்களில் சில ஓட்டைகள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி பொது ஊழியரான(முதல்வர்) ஜெயலலிதா பல்வேறு நபர்கள் அளிக்கும் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வது முற்றிலும் தவறானது. இதை உச்ச நீதிமன்றம், ‘பொது ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதையும்,அன்பளிப்புகள் வாங்குவதையும் தடை செய்துள்ளது. பொது ஊழியர் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டால்,லஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கியுள்ள தடைகளை ‘அன்பளிப்பு' என்ற பெயரில் எளிதாக‌ கடந்து விடுவார்கள்''எனக் கூறியுள்ளது. எனவே முதல்வரான ஜெயலலிதா அன்பளிப்பு பெற்றது சட்டப்படி குற்றம் ஆகும்'' என கூறியுள்ளார்.

மெல்லிய கோடு

அன்பளிப்பு தொடர்பான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை மேல்முறையீட்டின்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் கடுமையாக எதிர்த்தார். ‘‘தமிழக அரசியல் கலாச்சாரப்படி தொண்டர்கள் தங்களது தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது மிக சாதாரணமான ஒன்று. அந்த வகையில் ஜெயலலிதாவின் 44-வது பிறந்தநாளின்போது ரூ.2.92 கோடி வங்கி வரைவோலையாக வழங்கினர். ஜெயலலிதா நடிப்பதை நிறுத்தி முழு நேர தொழிலாக அரசியலில் ஈடுபட்டு வருவதாலும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியின் பெயராலும் அன்பளிப்பை தவிர்க்கவில்லை.

தனது முழுநேர தொழிலான அரசியலின் மூலம் கிடைத்த வருமானத்துக்கு, 1993-ம் ஆண்டு வ‌ருமான வரி செலுத்தினார். இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தபோது வருமான வரித்துறை தீர்ப்பாயம், ‘ஜெயலலிதாவின் அன்பளிப்பு பணத்தை வருமானமாக ஏற்றுக்கொள்வதாக' சான்றிதழ் அளித்தது.

மேலும் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்பு வழங்கிய 75 பேரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், 50 சதவீத நன்கொடையாளர்களை வருமான வரித்துறை தீர்ப்பாயமும் குறுக்கு விசாரணை செய்துள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தின்படியும்,இந்திய தண்டனை சட்டம் 165-ம் பிரிவின் படியும் சட்ட விரோதமாக வந்த பணத்தை மட்டுமே வருமானமாக ஏற்க முடியாது.இது தவிர‌ வருமான வரித்துறையின் 28-வது விதிமுறை, ‘அன்பளிப்பாக வரும் பணத்திற்கு வரி செலுத்தினால் சட்டபூர்வ வருமானமாக கருதப்படும்' என தெளிவாக சொல்கிறது. இதனை நீதிபதி குன்ஹா பரிசீலிக்காமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது.

பரிசுகளும்,அன்பளிப்புகளும் சட்டத்துக்கு புறம்பானவை என எந்த சட்டமும் சொல்லவில்லை. லஞ்சத்துக்கும் பரிசுக்கும் அன்பளிப்புக்கும் இடையே மெல்லிய கோடு இருக்கிறது'' என்றார்.

அதற்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ‘‘அதிமுக தொண்டர்கள் இவ்வளவு பரிசுப் பொருட்களை வழங்கி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது''என கூறியவர், ‘திமுக வழக்கறிஞர் சரவணனிடம், ‘‘உங்களது கட்சி தலைவர் கருணாநிதி இதேபோல‌ அன்பளிப்பு வாங்குவாரா?''என வினவினார்.அதற்கு அவர், ‘‘எங்கள் தலைவர் அன்பளிப்பு வாங்கமாட்டார்'' என்றார்.

அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கள், ‘‘கருணாநிதி பிறந்தநாளின்போது உண்டியல் வைத்து பணம் வசூல் செய்வார்கள். கருணாநிதி அறிவியல் பூர்வமாக‌ குற்றம் புரிகிறவர் என சர்க்காரியா கமிஷனே சான்றிதழ் அளித்துள்ளது''என கோரஸாக கூறினர். அப்போது கர்நாடக உயர் நீதிமன்றம் தமிழகத்தின் அரசியல் மேடையாக மாறியது.

மேலும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x