Published : 17 Oct 2014 10:59 AM
Last Updated : 17 Oct 2014 10:59 AM

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவருக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.

மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுகவின் 43-வது ஆண்டு விழாவன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.

உச்ச நீதிமன்ற விசாரணை விவரம்:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜரானார். ஃபாலி எஸ்.நாரிமன் சிறப்பாக வாதாடினார். ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் வாதாடினார்.

சுப்பிரமணியன் சுவாமி வாதம்:

சுப்பிரமணியன் சுவாமி மனுவில், "ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்வைத்த வாதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தவர் என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சுவாமியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அதற்கு பதிலளித்த நீதிபதி நாரிமன், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடாது என ஜெயலலிதாவே அறிக்கை வெளியிடுவார் என உறுதியளித்தார்.

நாரிமன் வாதம்:

ஊழல் வழக்கில் ஒரு நபர் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில் அவர் சார்பில் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை உச்ச நீதிமன்றம் சற்று தாராள கொள்கையுடன் அணுக வேண்டும்.

உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் சந்தித்த பல்வேறு வழக்குகளில், தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு முடியும் வரை உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என பவானி சிங் தெரிவித்தார்.

பவானி சிங் வாதத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர் ஏதோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேசப்பட்டது. எனவே, ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் ஜெயலலிதா வீட்டுக் காவலில் இருக்கவும் தயாராக இருக்கிறார்" என்று நாரிமான் வாதிட்டார்.

நீதிபதிகள் கூறியதாவது:

ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது. எனவே வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.

எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18-ம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.

அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.

ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

முந்தைய ரிப்போர்ட்:

12.58 PM: ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு.

12. 55 PM: அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

12. 50 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12.45 PM: ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையோ அல்லது நாளை (சனிக்கிழமை) காலையோ சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.43 PM: ஜாமீன் சூரிட்டி வழங்கிய பின்னர், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க முறைப்படி உத்தரவிட்ட பின்னர் அவர் விடுவிக்கப்படுவார்.

12.40 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு நகலை பெற்று அதனை அவரது வழக்கறிஞர்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

12. 36 PM: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் கண்டிப்பு.

12.35 PM: நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. 6 வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்றனர்.

12.30 PM: டிசம்பர் 18-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

12. 27 PM: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12.00 Noon : ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில், ஃபாலி எஸ்.நாரிமன் வாதாடி வருகிறார்.

11. 30 AM: கட்சி மேலிட உத்தரவை அடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் எவரும் குழுமவில்லை. படிக்க: >கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்

11. 15 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அமர்வு விசாரணை நடத்தும் அறையில் ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்தனர். இதனால், பெண் வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தலைமை நீதிபதி கண்டனத்துக்குப் பிறகு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

11. 12 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, வரிசை எண்படி 65-வது மனுவாக இருந்தாலும், இன்று விசாரிக்கப்பட வேண்டிய 20 முதல் 45-வது எண் வரையிலான வழக்குகளில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர்கள் வருகை தராததால் அவை ஒத்திவைக்கப்பட்டன. இதனால், ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் விசாரணை நடைபெறுகிறது.

11.10 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நடைபெறும்.

11. 05 AM: சுப்பிரமணியன் சுவாமி மனுவில், "ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

10. 45 AM: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் வந்தடைந்தார். சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

10. 43 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் இங்கு யாரும் இல்லை.

10.42 AM: உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

10.42 AM: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் நீதிமன்றம் வந்துள்ளார்.

10.40 AM: ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிடும் வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் நீதிமன்றம் வந்தடைந்தார்.

10.32 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, 65-வது வழக்காக விசாரணைக்கு வருகிறது. சசிகலா, இளவரசி மனுக்களுக்கு 68, 69 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று மனுக்களும் ஒரு சேர விசாரிக்கப்படும் என தெரிகிறது.

10.30 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.பி.சிக்ரி ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர்.

10.27 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததே காரணம் என கூறப்படுகிறது. மேலும், ஜாமீன் மனு மீதான தீர்ப்புகள் தமிழகத்தில் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாலும் நீதிபதிகள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.20 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்நிலையில், > ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டியுள்ளனர்.

10. 15 AM: ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவையும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

10. 12 AM: ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இது தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதே போல தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, இவ்வழக்கில் அர‌சு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

10.10 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு > மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரு.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அகரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 27-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக்டோபர் 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை அக்டோபர் 17-ல் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x