Last Updated : 22 Jan, 2017 12:01 PM

 

Published : 22 Jan 2017 12:01 PM
Last Updated : 22 Jan 2017 12:01 PM

சோனியா பிரச்சாரம் செய்ய மாட்டார்? - இளம் தலைமுறைக்கு வழிவிட்டு ஓய்வுபெற விருப்பம்

பிப்ரவரி 4 முதல் தொடங்கவுள்ள ஐந்து மாநில தேர்தலில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்வது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் சோனியா ஓய்வுபெற விரும்புவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சமீப மாதங்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். காங்கிரஸ் காரிய கமிட்டி உட்பட பல முக்கிய மான கூட்டங்கள் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடை பெற்றன. இதற்கு சோனியாவின் உடல்நிலை காரணமல்ல எனவும், 70 வயதுக்கு பிறகே அவர் ஓய்வு பெற விரும்புவதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வகையில் தற்போது நடைபெறும் ஐந்து மாநில தேர்தலிலும் சோனியா பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சோனியா பிரச்சாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கோவா மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள், “எங்க ளுக்கு தெரியாது, பார்க்கலாம், இன்னும் முடிவு செய்யப்பட வில்லை” என்றே பதில் கூறி வருகின்றனர். டெல்லியில் காங்கி ரஸ் தலைமையகம் வரும் கட்சியினரை சந்திப்பதையும் சோனியா தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “வழக்க மாக சோனியா கலந்துகொள்ள இருக்கும் கூட்டங்களில் பேசுவதற் கான விஷயங்கள் எங்களிடம் ஒரு மாதம் முன்பாகவே கேட்கப்படும். இந்தமுறை அது இன்னும் கேட்கப்படவில்லை. சோனியா குறைந்தபட்சம் அவரது ராய்ப ரேலி தொகுதியிலாவது பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கிறோம். இது, ராகுலை கட்சியின் தலை வராக முன்னிறுத்தும் முயற்சியாக வும் இருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

கடைசியாக தமிழ்நாடு, புதுச் சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தலா ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு சோனியா பிரச்சாரம் செய்தார். ஆனால் இந்த தேர்தலில் அவர் முழுமையாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என உறுதி செய்யவும் கட்சியினர் தயாராக இல்லை. உ.பி.யில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் முடிவை பிரியங்கா வதேரா மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், சோனியாவும் பிரச்சாரம் செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே உ.பி. காங்கிரஸார் சோனியாவை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x