Last Updated : 27 May, 2015 08:32 AM

 

Published : 27 May 2015 08:32 AM
Last Updated : 27 May 2015 08:32 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ.வுக்கு எதிராக களமிறங்கும் சமூக சேவகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற‌த்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில் தேமுதிக-வின் வழக்கறிஞர் பிரிவும் பாமகவின் வழக்கறிஞர் பிரிவும் தீவிரமாகவே களத்தில் குதித்துள்ளன. ஜெயலலிதா முதல்வர் பதவியேற்க தடைவிதிக்க வேண்டும் என தேமுதிக தொடுத்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதே போல கர்நாடகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த அந்த மாநில உயர் நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இதனிடையே, 'ஜெயலலிதா வின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முறையே தவறானது. மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்பது போன்ற வழிமுறைகள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது' என மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற‌ தலைமை நீதிபதி ஆகியோரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதா வுக்கு எதிராக சமூக ஆர்வ லர்கள் சிலர் தீவிரமாக களமிறங் கியுள்ளனர்.

ஓயாத டிராபிக் ராம‌சாமி

அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் அஞ்சாமல் சட்டப் போராட்டம் நடத்தும் மூத்த குடிமகன் டிராபிக் ராமசாமி இவ்வழக்கிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். நீதிபதி குன்ஹா முன்னிலையில் இறுதிக்கட்ட விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டும் என மனு போட்டார். அதை ஏற்க மறுத்த குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு வழிகாட்டினார்.

அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியபோது அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார். இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய டிராபிக் ராமசாமி, தலைமை நீதிபதி தத்து லஞ்சம் வாங்கியிருப்பதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி குமாரசாமியை சந்தித்து, 'ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை போதாது. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என மனு அளித்தார்.

இந்நிலையில், “சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக் கில் கர்நாடக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்''என உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை ( மனு எண்: 17027) டிராபிக் ராமசாமி கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இம்மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கும் வேளை யில் தனது உதவியாளர் பாத்திமா மூலம் நேற்று முன் தினம் இன்னொரு மனுவையும் (மனு எண்: 17418) தாக்கல் செய் துள்ளார். மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக குடியரசு தலைவர், பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தில் 'நரசிம்ம மூர்த்தி'

பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறி ஞருமான நரசிம்ம மூர்த்தி திருப்பதி தேவஸ்தானத்துக்கு எதிராகவும் திருவனந்தபுரம் பத்மநாப கோயிலுக்கு எதிராகவும் தொடுத்த வழக்குகள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவை. கர்நாடக அரசுக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவரும் நரசிம்ம மூர்த்தி, ஜெயலலிதா வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதில் இருந்து நீதிமன்றத்துக்கு வருகிறார். வழக்கின் போக்கு குறித்த தகவல்களை திரட்டிய அவர், நேரடியாக விசாரணையில் குறுக்கிட்டதில்லை.

எனினும் ஜெயலலிதா வழக்கு விசாரணையால் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கர்நாடக அரசுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டார். இதுவரை சுமார் ரூ.6 கோடி செலவாகி இருக்கிறது என தெரியவர, 'கர்நாடக அரசு இதனை ஜெயலலிதாவிடம் வசூலிக்க வேண்டும்' என்று அம்மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதினார்.

இதேபோல “ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தற்போது கர்நாட காவுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது?''என நரசிம்ம மூர்த்தி கேட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நரசிம்ம மூர்த்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பில் பல அடிப்படை தவறுகள் இருப்பதாக மூத்த வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் பத்திரிகையாளர்களும் தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசும் சுப்பிரமணியன் சுவாமியும் அன்பழகனும் அரசியல் செய்து வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் மேல்முறையீடு செய்தால் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கும். எனவே இவ்வழக்கில் உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு (தத்து) தயக்கம் இருந்தால் நானே மேல்முறையீடு செய்கிறேன். மன்மோகன் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஊழலுக்கு எதிரான இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய எனக்கு முழு உரிமை இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக தத்து இருந்தபோது நரசிம்ம மூர்த்தி அவருக்கு எதிராக பல புகார்களை எழுப்பி இருக்கும் நிலையில், இந்த கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா வுக்கு வழங்கப்பட்டுள்ள‌ விடு தலையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் நீதித்துறை வட்டாரத்தின் கவ‌னத்தை பெற்றுள்ளது.

(இன்னும் வருவார்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x