Published : 05 Nov 2013 02:51 PM
Last Updated : 05 Nov 2013 02:51 PM

செவ்வாய் கிரகத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது மங்கள்யான்

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள் யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.



இஸ்ரோ...

வளர்ந்த நாடுகளே வியக்கும் வண்ணம் விண்வெளித் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது இந்தியா. கடந்த 1975-ம் ஆண்டு விண்வெளி தொழில்நுட்பத்தில் கால்பதிக்க ஆரம்பித்த இந்தியா, ஆர்யபட்டா, பாஸ்கரா தொடங்கி அனுசாட், ஸ்டுட்சாட், ஜுக்னு என மாணவர் செயற்கைக் கோள் வரை 70-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யிருக்கிறது. எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை பயன்படுத்தி அவை விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்தியாவில் செயற்கைக் கோள்களையும், ராக்கெட்டுகளையும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது. உள்நாட்டுக்கு மட்டுமின்றி அவ்வப்போது வெளிநாடுகளுக்குத் தேவையான செயற்கைக் கோள்களை தயாரித்து கொடுப்பதுடன் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இங்கு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் ஏவும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய்க்கு விண்கலம்...

கடந்த 2008-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உலக நாடுகளை மூக்கின் மீது விரல் வைக்கச் செய்தது இஸ்ரோ. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியிருக்கின்றன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பார்வையும் செவ்வாய் கிரகம் மீது திரும்பியது. இதைத் தொடர்ந்து, ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் (மங்கள்யான்) அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியது. மனிதர்கள் உயிர் வாழத் தேவையான மீத்தேன் வாயு செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா? என்பதை ஆராய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த விண்கலத்தின் மொத்த எடை 1,350 கிலோ ஆகும்.

ஏற்பாடுகள்...

பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை அக்டோபர் 21-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, விண்கலம் அனுப்பும் திட்டம் நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய தேதியில் மங்கள்யான் விண்கலத்தை ஏவுவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திர மாநிலம் ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவும் மையத்தின் முதல் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை கடந்த 31-ம் தேதி நடத்தப்பட்டது.

விண்ணில் சீறிப்பாய்ந்தது...

அதன்பிறகு ராக்கெட் ஏவுவதற்கு ஒப்புதல் அளிக்கும் வாரியத்தின் அனுமதி 1-ம்தேதி கிடைக்கப்பெற்ற நிலையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 56 மணி நேர கவுன்டவுன் 3-ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்கியது. திட்டமிட்டபடி, ஹரிகோட்டா சதீஷ் தவண் ராக்கெட் ஏவு மையத்தின் முதலாவது தளத்தில் தயார் நிலையில் இருந்த பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

மஞ்சள் நிறத்தில் நெருப்பு பிழம்பை கக்கியபடி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்து சென்றபோது இஸ்ரோ விஞ்ஞானிகளும் இஸ்ரோ குடியிருப்பில் வீட்டு மாடிகள் மீது நின்றுகொண்டு ராக்கெட் பாய்ந்து செல்லும் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் குடும்பத்தினரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ராக்கெட் செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன், பி.எஸ்.எல்.வி. சி-25 திட்ட இயக்குனர், கே. குன்னி கிருஷ்ணன், மங்கள்யான் திட்ட இயக்குனர் அருணன் மற்றும் இதர விஞ்ஞானிகளுக்கும் இன்ஜினியர்களுக்கும் கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். சிக்னல் கிடைத்தது...

ராக்கெட் மிக நீண்ட நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்டதால், செலுத்தப்பட்ட 10 நிமிடங்கள் வரை அதன் செயல்பாட்டை கண்காணிக்க முடியவில்லை. இது விஞ்ஞானிகள் எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த சமயத்தில், ராக்கெட்டில் உள்ள மங்கள்யான் விண்கலத்தில் இருந்து அடுத்த அரை மணி நேரத்தில் கிடைத்த சிக்னல்கள் விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இந்த சிக்னல்களைப் பெறுவதற்காகவே முன்னேற்பாடாக, அந்தமான் தலை நகர் போர்ட்பிளேர், புருனே, பெய்க் ஆகிய இடங்களிலும், தென்பசிபிக் கடலில் யமுனா, நாலந்தா என்ற 2 கப்பல்களிலும் டெலிமீட்டர் ரீசிவர்களை நிறுவியிருந்தனர்.

நிலைநிறுத்தப்பட்டது...

அடுத்த 10 நிமிடங்களில் ராக்கெட்டுடன் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கிடைத்தது. ராக்கெட் இயக்கத்தின் ஒவ்வொரு நிலையும் வெற்றிகரமாக அமைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 43 நிமிடம், 46 விநாடியில் (பிற்பகல் 3.21 மணி 46 விநாடி) பூமிக்கு குறைந்தபட்சம் 246.9 கிலோ மீட்டர், அதிகபட்சம் 23,566 கிலோ மீட்டர் தூரத்தில் புவி நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நிலைநிறுத்தியது. அப்போதும் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

விண்கலம் குறிப்பிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை 3.22 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புவி நீள்வட்டப் பாதையில் 27 நாட்கள் பயணம் செய்யும் மங்கள்யான் விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே, டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு 12.42 மணிக்கு புவி நீள்வட்டப் பாதையில் இருந்து வெளியேற்றி, செவ்வாய் கிரக பாதையை நோக்கிச் செலுத்துவர். அந்த பாதையில் 300 நாட்கள் பயணம் செய்யும் இந்த விண்கலம், அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் அது செவ்வாய் கிரகத்தைச் சுற்றி ஆய்வுசெய்யும். இதற்குத் தேவையான நவீன சாதனங்களும், கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மீத்தேன் குறித்து ஆய்வு...

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

பூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழலாம் என்பது மனிதர்களிடம் இருந்துவரும் யூகம். ஆனால், அதற்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. புரியாத இந்த புதிருக்கு மங்கள்யான் விண்கலம் விடையளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x