Published : 13 Apr 2015 07:41 AM
Last Updated : 13 Apr 2015 07:41 AM

செல்போன் நிறுவனங்களுக்கு எதிராக போர்க்கொடி: ‘இணையதள நடுநிலை’ கொள்கைக்காக கைகோத்த வாடிக்கையாளர்கள்

இணையதள நடுநிலை கொள்கையை மீறி செயல்பட திட்ட மிட்டுள்ள செல்போன் நிறுவனங்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. |வீடியோ இணைப்பு கீழே|

நாட்டில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இவ்வகை போன் கள் பெரும்பாலும் இன்டர் நெட் பயன்பாட்டுக்கே பயன் படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் உறவினர் களுடன் பேசுவதற்கு ஸ்கைப் பயன்படுத்துவோர் ஏராளமாக உள்ளனர். இதுதவிர, வாட்ஸ் அப், லைன், வைபர் போன்றவையும் இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியை வழங்கு கின்றன. இந்நிலையில் விஓஐபி (வாய்ஸ் ஓவர் ஐ.பி) மூலம் தொடர்புகொள்ள உதவும் ஸ்கைப், வைபர் போன்றவற்றை பயன் படுத்தி பேசுவோருக்கு தனி கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை தொலைத்தொடர்பு நிறுவனங் கள் வெளியிட்டுள்ளன. அதிலும் பல்வேறு வகையாக கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டதால் வாடிக் கையாளர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இணையதள வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி, இணையதள நடு நிலை (Net Neutrality) கொள் கைகளை மீறி செயல்ட உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்க ளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். இதன் ஒருபகுதியாக > savetheinternet.in என்ற இணையதளத்தின் மூலம் இணையதள நடுநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்த விதிமுறையை உருவாக்குவதற்காக பொது மக்களின் ஆலோசனையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கேட்டிருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் சேவ்திஇன்டர்நெட்.இன் இணையதளம் மூலம் டிராய்-க்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர்.

இதுதவிர, ஆன்சேஞ்ச்.ஓஆர்ஜி இணையதளம் மூலம் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் துக்கு 1.5 லட்சம் பேர் ஆன்லை னில் மனு அனுப்பி உள்ளனர்.

இணையதள நடுநிலை என்றால் என்ன?

இணையதள சேவை வழங்குவோர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள்அரசு ஆகியவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சம அளவில், பாகுபாடின்றி, அனைத்து இணையதள சேவைகளையும் ஒரே மாதிரியான வேகம் மற்றும் கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான் இணையதள நடுநிலை கொள்கை.