Published : 24 Apr 2014 09:05 AM
Last Updated : 24 Apr 2014 09:05 AM

செய்தி வெளியிட பணம்: 854 வழக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிட்டு 45 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது தொடர்பாக 854 வழக்குகளைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.

இதில் 329 பேர் மீதான புகார்களில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிட்டதாக 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42 வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 37 பேருக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத் தில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 64 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பஞ்சாபில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதே போன்று குஜராத்தில் 61 வழக்குகள் (45 பேருக்கு நோட்டீஸ்), மகாராஷ்டிரத்தில் 118 வழக்குகள் (23 பேருக்கு நோட்டீஸ்), கர்நாடகத்தில் 34 வழக்குகள் (15 பேருக்கு நோட்டீஸ்), பிஹாரில் 10 வழக்குகள் (ஒருவருக்கு நோட்டீஸ்), மத்தியப் பிரதேசத்தில் 9 வழக்குகள் (4 பேருக்கு நோட்டீஸ்), ஒடிசாவில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 8 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பணத்தை அளித்து தனக்கு ஆதரவாக செய்தி வெளியிடச் செய்யும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த தொகை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x