Last Updated : 16 Jun, 2015 06:12 PM

 

Published : 16 Jun 2015 06:12 PM
Last Updated : 16 Jun 2015 06:12 PM

சுஷ்மா எந்தத் தவறும் செய்யவில்லை: அருண் ஜேட்லி திட்டவட்டம்

லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தவறு செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதே கருத்தை சிவசேனா கட்சித் தலைமையும் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது கடந்த 2010-ல் ஊழல் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்தது. அவரது பாஸ்போர்ட் 2011 மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசிடம் கடந்த ஆண்டு விசா கோரி லலித் மோடி விண்ணப்பித்தார். இந்தியாவில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்தது. இதில் லலித் மோடிக்கு விசா கிடைக்க மத்திய அமைச்சர் சுஷ்மா உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தவறுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. எனினும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுஷ்மாவுக்கு பக்கபலமாக உள்ளன.

அருண் ஜேட்லி நற்சான்று

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு அருண்ஜேட்லி நிருபர்களிடம் பேசும்போது, சுஷ்மா ஸ்வராஜ் நல்லெண்ணத்தில் செயல்பட்டுள்ளார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவருக்கு மத்திய அரசும் பாஜகவும் ஆதரவாக உள்ளன என்று தெரிவித்தார்.

சுஷ்மா விவகாரத்தில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். ஜேட்லி மட்டும் மவுனம் காத்து வந்தார். இப்போது அவரும் சுஷ்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சிவசேனா ஆதரவு

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளே டான ‘சாம்னா’வில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

தாவூத் இப்ராஹிம் அல்லது கசாப் போன்ற பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் கிடைக்க சுஷ்மா உதவியதுபோல காங்கிரஸ் நடந்துகொள்கிறது. சில ஊடகங்களால் இந்தப் பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. சுஷ்மாவின் 35 40 ஆண்டுகால பொதுவாழ்வில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தீவிரம் காட்டுபவர்கள் யார் என்பதை அறிய பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சுஷ்மாவை சர்ச்சைக்குரியவராக சித்தரிப்பதன் மூலம் அவரை பாஜகவில் இருந்தும் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றிட மிகப்பெரிய அரசியல் சதி நடப்பதாக தோன்றுகிறது.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியர் ஒருவருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தை பலவீனப் படுத்தும் வகையில் அதன் மீது சிலர் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மிகப் பெரிய அரசியல் விளையாட்டு பிரதமர் மோடியால் முடித்து வைக்கப்பட வேண்டும். இவ்வாறு ‘சாம்னா’வில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x