Published : 13 Jul 2017 09:48 AM
Last Updated : 13 Jul 2017 09:48 AM

சிறையில் சகல வசதிகளுடன் சசிகலா: சிறைத்துறை உயரதிகாரி ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா விஐபி சலுகைகளைப் பெற்று சவுகரியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

புதன்கிழமையன்று அவர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், சிறைத்துறை எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும் சசிகலா தரப்பிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனி சமையலறை..

சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையலிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை உள்துறை செயலருக்கும், ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை மறுக்கும் ராவ்..

இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி சத்தியநாராயண ராவ் கூறும்போது, "சிறைச்சாலையை நான் சோதனை செய்துவருகிறேன். அங்கு எந்த முறைகேடும் நடப்பதாகத் தெரியவில்லை. ஊழல் நடந்ததாகவும் தெரியவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரூபா அதை எப்படி நிரூபிக்கப்போகிறார் என எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன்னதாக ரூபாவுக்கு இரண்டு முறை மெமோ கொடுத்திருக்கிறேன். அந்த மெமோக்களுக்கு பழிவாங்கும் முயற்சியாக ரூபா இப்படியொரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்கிலம் சார்பில் ரூபாவைத் தொடர்பு கொண்டபோது அவர் எவ்வித கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

ரூபா தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்..

1. மத்திய சிறையில் போதை வஸ்துகள் பயன்பாடு இருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் ஜூலை 10-ம் தேதியன்று 25 கைதிகளுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தியதில் 18 கைதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. சிலர் கஞ்சாவும் சிலர் பென்சோடியசபைனும் பயன்படுத்தியது உறுதியானது. ( இது தொடர்பாக சிறைத்துறை தலைமை எஸ்.பி. கிருஷ்ணகுமாருக்கு அறிக்கை அளித்தும் சிறைக்குள் போதை வஸ்துகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை )

2. சிறைக் கைதிகளின் மருத்துவ கோப்புகளைப் பாதுகாக்கும் அறைக்கு அரசு நியமிக்கும் வார்டனே கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். ஆனால், சிறைக் கைதிகளே இந்த அறைக்கு பாதுகாவலர்களாக நியமிக்கப்படுவதால் பல வழக்குகளுக்குத் தேவைப்படும் பல முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன.

3. சிறையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டபோது சிறைக்கைதி ஒருவர் செவிலியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். இது தொடர்பாக பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறைச்சாலை மருத்துவர்களை கைதிகள் மிரட்டுகின்றனர். தங்களை சிறை மருத்துவமனையிலேயே வைத்திருக்கும்படி மிரட்டுகின்றனர்.

4. சிறைக்கைதிகளையே பார்மஸியில் பணியமர்த்துவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் தூக்க மருந்துகள் போன்றவற்றை பிற கைதிகள் போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x