Published : 11 Jul 2017 08:23 AM
Last Updated : 11 Jul 2017 08:23 AM

சிறைத்துறை விடுத்த எச்சரிக்கையால் அச்சம்: எனக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் - டெல்லி போலீஸில் சேகர் ரெட்டி மனு

தனக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக மத்திய, மாநில அரசுகளுக்கு தொழிலதிபர் சேகர் ரெட்டி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

தமிழக பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த டிசம்பரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.120 கோடி பணம், அதிக அளவிலான தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பிடிபட்ட பணத்தில் ரூ.33 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும், ரூ.33 கோடி புதிய நோட்டுகள் வைத்திருந்ததாக சிபிஐ போலீஸாரும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யயப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், இதுவரை இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 2 வழக்குகளிலும் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சேகர் ரெட்டியை கடத்தி கொலை செய்ய புழல் சிறையில் உள்ள சில கொடுங்குற்றவாளிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அவருக்கு தமிழக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி, டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவில் சேகர் ரெட்டி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி னார்.

சிறையில் உள்ள சிலர், தங்கள் கூட்டாளிகள் மூலம் சேகர் ரெட்டியைத் தாக்க சதித்திட்டம் தீட்டியதாகவும், அவரிடம் இருந்து அதிக அளவில் பணம் பறிப்பது அல்லது அரசியல் ரீதியாக சில விவரங்களை பெறுவது என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கலாம் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சேகர் ரெட்டியின் புகார் தொடர்பாக டெல்லி போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் சேகர் ரெட்டி மனுவை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ள தமிழக உள்துறை செயலர், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, சிறைத்துறையின் எச்சரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சேகர் ரெட்டி கடிதம் எழுதி, பாதுகாப்பு கோரியிருந்தார். ஆனால், அப்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மீண்டும் சேகர் ரெட்டிக்கு மிரட்டல் வந்துள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும் உடனடி ஆபத்து இருப்பதாக மிரட்டியுள்ளனர். எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான தொகையை வழங்குவதாக போலீஸாரிடம் சேகர் ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து, டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவினர், அவர் தங்கியிருக்கும் பகுதியை பார்வையிட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் சேகர் ரெட்டியை ஒழிப்பதன் மூலம் மணல் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளை ஒட்டுமொத்தமாக பலமிழக்கச் செய்ய யாரேனும் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x