Last Updated : 10 Nov, 2016 04:41 PM

 

Published : 10 Nov 2016 04:41 PM
Last Updated : 10 Nov 2016 04:41 PM

சிறிய தொகையினை மாற்றுபவர்களுக்கு வரித் தொந்தரவு இல்லை: அருண் ஜேட்லி தகவல்

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை சிறிய அளவில் டெபாசிட் செய்து, மாற்றிக் கொள்பவர்களுக்குப் பிரச்சினையில்லை, ஆனால் கணக்கில் வராத பெரிய அளவிலான தொகையை டெபாசிட் செய்பவர்கள் வரிச்சட்டங்களின் படி 200% அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று அருண் ஜேட்லி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜேட்லி கூறியதாவது:

சிறிய தொகையினை டெபாசிட் செய்பவர்களுக்கு எந்த வித வரித் தொந்தரவும் இருக்காது. வீட்டில் செலவுகளுக்காக வைத்திருக்கும் சிறிய அளவுத் தொகையை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்பவர்களை வரித்துறையினர் தொந்தரவு செய்ய மாட்டார்கள். வருவாய்த் துறையினரின் பார்வை இவர்கள் மேல் அல்ல.

ஆனால் கணக்கில் காட்டாத பெரிய தொகையினை டெபாசிட் செய்பவர்கள் வரிச்சட்டங்களின் படி விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்” என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி இகனாமிக்ஸ் எடிட்டர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.

வருவாய் செயலர் ஹஷ்முக் ஆதியா நேற்று தெரிவிக்கும் போது, வங்கிக் கணக்குகளில் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை டெபாசிட் செய்பவர்களை வருமானவரித் துறையினர் ஆய்வு செய்வார்கள். அவர்களது கணக்கு சமர்ப்பிப்புத் தொகைக்கும் இதற்கும் பொருத்தப்பாடு இல்லையெனில் வரியுடன் 200% அபராதம் விதிக்கப்படும் என்றார்.

கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை உதவுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி, “இது ஒரு தனிப்பட்ட முயற்சி அல்ல, இது குறித்து சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் உள்ளிட்ட பல முயற்சிகளின், நடவடிக்கைகளின் பின்னணியில் பார்க்க வேண்டும். சந்தைக்கு வராத பணம் பலவாறு முடங்கியுள்ளது. ஜி.எஸ்.டி முறை நடைமுறைக்கு வரும்போது வரி ஏய்ப்பும் கடுமையாகக் குறையும். அதே போல் நேரடி வரி விதிப்பு முறையையும் அறிவுக்குகந்ததாக மாற்ற முடியும்.

இவ்வாறான பல்வேறு நடவடிக்கைகளின் கூட்டு விளைவு கருப்புப் பணம் பதுக்குவதை ஊக்குவிக்காது. இதன் மூலம் கருப்புப் பணம் பதுக்குவதை முற்றிலும் எதிர்காலத்தில் ஒழித்து விடமுடியுமா என்பதை நான் இப்போதைக்கு கூற முடியாது, ஆனால் நிச்சயம் கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை இந்த நடவடிக்கைகள் ஊக்குவிக்காது.

தற்காலிக கடினப்பாடுகளைக் காரணம் காட்டி கறுப்புப் பணம் வளமையடைவதை நிரந்தரமாக்க முடியாது. எதிர்கால சுத்தமான அமைப்பை உருவாக்க தற்காலிக, குறுகிய கால கடினப்பாடுகளுக்குத் மக்கள் தயார் செய்து கொள்வது அவசியம்.

மக்கள் வங்கிகளை முற்றுகையிட வேண்டிய அவசியமில்லை, நிறைய கால அவகாசம் கொடுத்துள்ளோம். டிசம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது, இது நிறைவான கால அவகாசமே. அதிக டெபாசிட்கள், அதிக பணமாற்றங்கள் பரவுவது மக்களுக்கு நல்லதுதானே.

சில நாட்களுக்கு நோட்டுகளின் போதாமை என்ற கடினமான நிலைமைகள் இருக்கும், இதனால் அன்றாட நடவடிக்கைகளில் இதன் தாக்கம் இருக்கும் ஆனால் இடைக்கால அல்லது நீண்ட கால அடிப்படையில் நோக்கினால் இந்த சமீபத்திய எங்களது நடவடிக்கைகள் பொருளாதாரத்தை உடன்பாடான ஒரு கட்டத்திற்கு, தாக்கத்திற்கு கொண்டு செல்வதை புரிந்து கொள்வீர்கள்.

குறுகிய கால அளவில் நுகர்வு பாதிக்கப்படும். தற்போது பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகள் பல சந்தைக்கு வராமலேயே முடங்கிக் கிடக்கின்றன, இவை அடுத்த வாரங்களில் மாற்றம் செய்யப்படும் போது தற்போதைய நுகர்வு நிலை மாறி பழைய நிலை திரும்பும்.

வங்கிகளுக்கு இதன் மூலம் மூலதனம் கிட்டும் என்றாலும் அவற்றிற்கு மேலும் மூலதனம் தேவைப்படும். ஆனால் இதன் மூலம் மூலதனம் திரட்டும் ஆதாரம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x