Published : 17 Nov 2015 02:49 PM
Last Updated : 17 Nov 2015 02:49 PM

சித்தூர் மேயர் அனுராதா சுட்டுக் கொலை; கணவர் படுகாயம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கணவர் மோகனும் கத்தியால் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கட்டாரி மோகன், தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவர் மீது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அதில் இவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக சித்தூர் முன்னாள் எம்எல்ஏ சி.கே. பாபு மீது, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.

சி.கே. பாபு மீதும் சித்தூரில் வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றது. இதற்கு கட்டாரி மோகன்தான் காரணமென கூறப்பட்டது. இவ் வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனி டையே சுமார் 3 வருடம் தலைமறை வாக இருந்த மோகனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனி டையே சித்தூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 17 மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. இதில் கட்டாரி மோகனின் மனைவி அனுராதா வெற்றி பெற்று, சித்தூர் மாநகராட்சியின் முதல் மேயரானார்.

இந்நிலையில், நேற்று மோகன், மேயர் கட்டாரி அனுராதா ஆகிய இருவரும் சித்தூர் மாநகராட்சி அலுவலகம் சென்றனர். அப்போது முஸ்லிம் பெண்கள் அணிவதை போன்ற ‘பர்தா’ அணிந்த 3 பேர், மேயரிடம் மனு கொடுக்க வேண்டும் எனக் கூறி அவரது அலுவலகத்துக்குள் சென்றனர். அவர்களுடன் மேலும் 4 பேர் உடன் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், அலறலும் கேட்டதை தொடர்ந்து அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மேயரும் அவரது கணவரும் உயிருக்காக போராடிய நிலையில் விழுந்து கிடந்தனர்.

கொலையாளிகள் அலுவலத்தின் பின்புற சுவர் ஏறி குதித்து பைக்கு களில் தப்பிச் சென்றுள்ளனர். மேயர் அனுராதாவும், அவரது கணவர் மோகனும் சித்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அனுராதா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவரின் நெற்றியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளது. மேலும் கண், மார்பு பகுதிகளில் கத்திக் குத்து காயங்கள் உள்ளன. மோகனின் கழுத்து, மார்பு, வயிற்றுப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

மோகன் உயர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு துப்பாக்கி குண்டு அகற்றப் பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சித்தூர் காவல் துறையினர், சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைத் துப்பாக்கி, பர்தா, கத்தி போன்றவற்றை கைப்பற்றி யுள்ளனர்.

கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

2 பேர் சரண்

இக்கொலை தொடர்பாக 2 பேர் சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடை பெறுகிறது.

கொலையாளிகள் மொத்தம் 7 பேர் எனவும், இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, குல்பர்கா போன்ற இடங்களைச் சேர்ந்த வர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. குப்பம் தொகுதியில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதையடுத்து சித்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உறுதி

இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, “குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சட்டப்படி கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர். இறந்த மேயர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x