Published : 24 Sep 2015 10:51 AM
Last Updated : 24 Sep 2015 10:51 AM

சமூக வலைதளங்களில் பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்

உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் டைப்ரைட்டரை காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் உடைத்த சம்பவம் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி, பெரும் பிரபலமடைந்தது. அந்த காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த முதியவருக்கு புதிய டைப்ரைட்டர் வழங்கிய மாவட்ட நிர்வாகம், ரூ.1 லட்சம் இழப்பீடு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தால் பிரபலமடைந்ததால் தனது வருமானத்தை இழந்து விட்டதாக அந்த முதியவர் கிருஷ்ண குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“அஞ்சலகம் முன்பு தட்டச்சு செய்து கொடுத்ததால் கொஞ்சம் வருவாய் கிடைத்து வந்தது. என் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் நான் தேவையற்ற வகையில் பிரபலமாகியுள்ளேன்.

என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் சேர்ந்து விடுவதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கடந்த இரு நாட்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதிக்கவில்லை என்றால், என் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவது. நான் வேலை செய்யவே வந்திருக்கிறேன்; ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க அல்ல.

உதவி செய்வதாகக் கூறி பலர் என்னிடம் வங்கிக் கணக்கு கேட்டனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. அடையாளம் தெரியாதவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர்” என கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x