Last Updated : 22 Mar, 2015 12:33 PM

 

Published : 22 Mar 2015 12:33 PM
Last Updated : 22 Mar 2015 12:33 PM

சனிக்கிழமை பணிக்கு வரவேண்டும்: கேஜ்ரிவால் உத்தரவால் அதிகாரிகள் அதிருப்தி

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதல்வராக 2-வது முறையாக கேஜ்ரிவால் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மாநில அரசின் விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் கேஜ்ரிவால் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுகிறார். அப்போது தனது பணிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், துணைச் செயலாளர் மற்றும் கூடுதல் அந்தஸ்து பதவி வகிப்பவர்கள் தங்களின் துணை அலுவலர்களுடன் சனிக்கிழமைகளிலும் தலைமைச் செயலகம் வரவேண்டும் என்ற உத்தரவுடன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த உத்தரவு அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி தலைமைச் செயலக அதிகாரிகள் கூறும்போது, “தலைமைச் செயலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பணியாற்றும் டெல்லி அரசு அதிகாரிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. ஏற்கெனவே கேஜ்ரிவால் அரசு அமைந்தது முதல், வேலைநாட்களில் இரவுவரை பணியாற்ற வேண்டியுள்ளது. இப்போது விடுமுறை நாளிலும் வரவேண்டும் எனக் கூறுவது எங்களை சோர்வடையச் செய்கிறது. இதற்காக கூடுதல் ஊதியமும் இல்லை” என்றனர்.

டெல்லி மாநில அரசில் கடந்த பல ஆண்டுகளாக வேலைநாட்களில் அதிகாரிகள் சரியாகப் பணியாற்றாமல் ஆயிரக்கணக்கான கோப்புகள் நிலுவையில் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. எனவே அவற்றை சரிபார்த்து அனுப்பும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கோப்புகளை நிலுவையில் வைத்தது அதிகாரிகளின் தவறு என்பதால் அவற்றை முடித்து வைப்பது அவர்களின் கடமை என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகின்றனர்.

எனினும் அதிகாரிகள் மீதான இந்த நடவடிக்கையால் கேஜ்ரிவாலின் அரசுப் பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x