Last Updated : 20 Jul, 2017 08:13 AM

 

Published : 20 Jul 2017 08:13 AM
Last Updated : 20 Jul 2017 08:13 AM

சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் சிறையில் தீவிர விசாரணை - முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற‌ ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் நேற்று நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங் களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், இந்த சிறையில் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா டி.மவுட்கில் திடீர் சோதனை மேற்கொண்டார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதில், சிறப்புச் சலுகைகளைப் பெறுவதற்காக, டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ‌ சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், சசிகலா வண்ண உடைகளில் உலவுவது போலவும் முத்திரைத்தாள் மோசடி மன்னன் சொகுசு அறையில் தூங்குவது போலவும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறை முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை முதல்வர் சித்தராமையா அமைத்தார்.

ஏடிஜிபி மேக்ரிக்

இதையடுத்து வினய் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக சிறை முறைகேடு தொடர்பாக டிஐஜி ரூபா அளித்த அறிக்கைகள், டிஜிபி சத்தியநாராயண ராவ் தாக்கல் செய்த 16 பக்க அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டனர். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களையும் கைப்பற்றினர்.

சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்

இந்நிலையில் நேற்று காலையில் வினய் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர். அங்குள்ள தலைமை சிறை கண்காணிப்பாளர் ஆர்.அனிதாவின் அறைக்குச் சென்று, சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை, விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்தனர்.

மேலும் சிறையில் விவிஐபி, ஏ கிளாஸ் வசதி பெறும் கைதிகள் யார், அரசியல் கைதிகள் யார், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான தகவல் களைக் கேட்டறிந்தனர். சிறை முறைகேட்டில் ஈடுபட்ட கைதிகளின் பெயர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தனர். இதையடுத்து சிறையில் உள்ள முக்கிய கோப்புகளை ஆராய்ந்து, அதில் உள்ள விவரங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, சசிகலா, ஏ.கே. தெல்கி உள்ளிட்ட கைதிகள் தங்கியுள்ள அறை வளாகத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது சசிகலா, தெல்கி உள்ளிட்ட பணக்கார கைதிகள் சிறையில் விதிமுறைகளை மீறி, பல்வேறு சலுகைகளை பெற்றுவந்தது தெரியவந்தது. இந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும், முக்கிய கோப்புகளையும் விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விரைவில் அறிக்கை

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் கூறும்போது, “கர்நாடக அரசு உத்தரவின்படி விசாரணையை தொடங்கி இருக்கிறோம். எங்களது குழுவில் யார் இடம்பெற்றிருக்கிறார்கள், யாரிடம் விசாரிக்கப் போகிறோம், எப்போது அறிக்கை தாக்கல் செய்வோம் என எதையும் வெளிப்படையாக கூறமுடியாது. ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களை அவ்வப்போது தெரிவிப்போம். விரைவில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்வோம்” என்றார்.

சசிகலா சலுகைகள் பறிப்பு

அதிகாரிகளின் தொடர் சோதனையால் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் அனைத்தும் நேற்று பறிக்கப்பட்டன. அவரது அறையில் இருந்த தொலைக்காட்சி, மின் அடுப்பு, மினரல் வாட்டர் இயந்திரம், வண்ண உடைகள் உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுபோல ஏ.கே.தெல்கி, பிரபல அரசியல்வாதிகள், ரவுடிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்புச் சலுகைகளும் ரத்து செய்யப்ப‌ட்டன.

சிறையில் உள்ள அனைத்து அறைகளையும் பார்வையிட்டு விதிமுறையை மீறி, பதுக்கி வைத்திருந்த வண்ண உடைகள், செல்போன், சமையல் பாத்திரங் கள், மின் அடுப்பு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத் தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல கைதிகள் வண்ண உடைகள் அணிவதற்கும் சிறை அறையை விட்டு வெளியே வருவதற்கும், வெளியில் இருந்து உணவு கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

புதிய ஏடிஜிபி திடீர் சோதனை

கர்நாடக சிறைத்துறையின் புதிய ஏடிஜிபியாக பொறுபேற்றுள்ள மேக்ரிக், டிஐஜி ரேவண்ணா ஆகியோர் நேற்று மாலை பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தலைமை கண்காணிப்பாளர் அனிதா, கண்காணிப்பாளர் வீரபத்ரசாமி உள்ளிட்டோரிடம் சிறை முறைகேடுகள் தொடர்பாக விசாரித்தனர். அப்போது, “சிறையில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும், கைதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறை முறைகேடு தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது” என எச்சரித்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக ஏடிஜிபி மேக்ரிக் கூறும்போது, “சிறை விதிமுறைகளின்படியே அதிகாரிகள் செயல்பட வேண்டும். சிறைக்கு வந்து செல்லும் அனைவரையும் கட்டாயம் சோதித்த பிறகே அனுமதிக்க வேண்டும். குறிப்பாக சிறைக்குள் கொண்டுசெல்லும் பொருட்களை நவீன தொழில்நுட்ப கருவியின் மூலம் சோதிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x