Published : 18 Jul 2017 07:38 AM
Last Updated : 18 Jul 2017 07:38 AM

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு? - உள்துறை அதிகாரிகள் அறிக்கையால் பரபரப்பு

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசின் உள்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பது, சிறப்பு வசதிகளை பெறுவது, எம்பி, எம்எல்ஏக்களை சந்திப்பது என ச‌சிகலா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

“சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகிறார்” என்று டிஐஜி ரூபா டி.மவுட்கில் கூறினார். டிஜிபி சத்தியநாராயண ராவ் ரூபாவின் புகாரை மறுத்தபோதும், சிறை முறைக்கேடு தொடர்பாக அடுத்தடுத்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.

இதனால் கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகவும், உள்துறையை கண்காணிக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து சித்தராமையா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக்குழுவை அமைத்தார்.

சித்தராமையா அதிர்ச்சி

சசிகலா லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிறை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கைதிகளுக்கு இடையே இரு குழுக்கள் உருவானது. டிஐஜி ரூபாவுக்கு எதிராக திரண்ட ரவுடி குழு, மற்றொரு குழுவை தாக்க திட்டமிட்டது. சிறையில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்படும் சூழ‌லில் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் பெல்லாரி, குல்பர்கா உள்ளிட்ட சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

சில கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் சசிகலா, அப்துல் கரீம் தெல்கி, பிரபல தாதாக்கள் உள்ளிட்ட பணக்கார கைதிகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வசதிகளை வழங்க வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல சிறைக்கு வெளியே உள்ள கைதிகளின் குடும்பத்தார் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால் முதல்கட்டமாக, சிக்கலில் சிக்கிய சிறை அதிகாரிகள் டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முறையிட்டுள்ளதால் சித்தராமையா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதிகாரிகள் ஆலோசனை

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிறை முறைகேடுகள் வெளியானதால் அரசுக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளை முதல்கட்டமாக சித்தராமையா இடமாற்றம் செய்துள்ளார். அடுத்ததாக கர்நாடக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவரும் கைதிகளையும் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி சித்தராமையா கேட்டுக்கொண்டதன் பேரில், உள்துறை செயலர்கள் நேற்று சிறையில் ஆய்வு செய்தனர். சிறையில் குழுக்களை உருவாக்குவது, ரவுடிகளை பாது காவலர்களாக வைத்துக்கொள்வது, விதி முறையை மீறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட கைதிகளை உடனடியாக வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளனர். இதன்படி முதல்கட்டமாக 50-க்கும் மேற்பட்டோர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதே போல சிறையில் செல்வாக்கோடு வாழும் சசிகலா, தெல்கி உள்ளிட்டோரையும் வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசித்தனர்.

சசிகலா பாதுகாப்புக்கு சிக்கல்

இதன்படி உள்துறை அதிகாரிகள் சித்தராமையாவுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர். அதில், '' சிறையில் நிலவும் அசாதாரண சூழல் சசிகலாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகா தமிழகம் இடையே நல்ல சூழல் நிலவாத நிலையில், சசிகலாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் நிலைமை மோசமாகும்.

இதேநிலையில் சசிகலா பெங்களூரு சிறையில் தொடர்ந்து விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரு காரணங்களையும் பரிசீலித்து அவரை கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்கலாம். குறிப்பாக துமக்கூரு, மைசூரு ஆகிய இடங்களில் மகளிருக்காக தனியாக உள்ள சிறைகளை பரிசீலிக்கலாம். சசிகலாவை வேறு மாநில சிறைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதால் வேறு மாநில சிறைக்கு மாற்ற முடியாது'' என குறிப்பிட்டுள்ளனர்.

உள்துறை அதிகாரிகளின் இந்த ரகசிய அறிக்கையை கொண்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா, சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x