Last Updated : 30 Sep, 2014 10:21 AM

 

Published : 30 Sep 2014 10:21 AM
Last Updated : 30 Sep 2014 10:21 AM

கோயில் கழுவப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளை உடனே கைது செய்திருக்க வேண்டும் - ராம்விலாஸ் பாஸ்வான் பேட்டி

பிஹாரில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, தரிசனம் செய்தபின் கோயில் கழுவப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்திருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.

பாஸ்வான் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “தீண்டாமை ஒரு குற்றச்செயல். இதனால் சாதாரண குடிமகன் பாதிக்கப்படுவதைக் கூட நாம் அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும்போது ஒரு மாநில முதல்வரின் தரிசனத்துக்குப் பின் கோயில் கழுவப்பட்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடானது வேறு எதுவும் இல்லை. இது பற்றி அறிந்த உடனேயே குற்ற வாளிகளை மாஞ்சி கைது செய்து சிறைக்கு அனுப்பி யிருக்க வேண்டும்” என்றார்.

பிஹாரின் முதல் தலித் முதல்வர் போலா பாஸ்வான் சாஸ்திரி நினைவாக பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிதன்ராம் மாஞ்சி பேசினார். அப்போது, “சமூகத்தின் அடித் தட்டு மக்களிடம் தீண்டாமை இன்றளவும் நீடிக்கிறது. மாநில முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் நான் தீண்டாமையால் பாதிக்கப் படுகிறேன். கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது வடக்கு பிஹாரில், மதுபானி மாவட்டத்தில் ஒரு கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன். நான் அங்கிருந்து வந்த பிறகு கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, சுவாமி சிலை கழுவப்பட்டுள்ளது. இதை எனது அமைச்சர் ராம்லக்கன் ராம் ராமன் (சுரங்கத் துறை) மூலம் பின்னர் தெரிந்துகொண்டேன்.

உயர் ஜாதியினர் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, எனது ஜாதி பற்றி தெரிந் திருந்தாலும் எனது காலைத் தொட்டு வணங்கத் தயங்குவதில்லை. இந் நிலையில் மறுபுறம் தீண்டாமையும் நிலவுகிறது. இதுபோன்ற உலகில் தான் நாம் வாழ்கிறோம்” என்றார்.

என்றாலும் முதல்வரின் இந்தப் பேச்சுக்கு அவரது கட்சியைச் சேர்ந்த (ஐக்கிய ஜனதா தளம்) எம்.எல்.சி. வினோத் குமார் சிங் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

“இதுபோன்ற சம்பவம் நடை பெறவில்லை. தவறான தகவல் முதல்வரிடம் கூறப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முதல்வரிடம் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கோயிலுக்கு முதல்வர் வந்ததில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்” என்றார்.

மாஞ்சியின் அப்போதைய பயணத்தை நினைவுகூர்ந்த அவர், “முதல்வர் எனது ஜன் ஜார்பூர் இல்லத்தில் மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு பயணத்தை தொடர்ந்தார். ருத்ராபூர் என்ற இடத்தில் உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே பரமேஸ்வரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். 2 நாட்களுக்குப் பிறகு நான் அங்கு சென்றிருந்தேன். இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x