Last Updated : 27 Oct, 2015 01:21 PM

 

Published : 27 Oct 2015 01:21 PM
Last Updated : 27 Oct 2015 01:21 PM

கேரளா பவன் மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி போலீஸ் சோதனையும் 10 முக்கிய தகவல்களும்

டெல்லியில் உள்ள கேரளா பவனில் உள்ள உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு அம்மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்வுகள் 10 முக்கிய அம்சங்களாக...

* டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின் விருந்தினர் இல்லமான கேரளா பவன் அமைந்துள்ளது. இங்குள்ள உணவகத்தில் வெளி ஆட்களும் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்த உணவகத்தில் பசுவின் இறைச்சி பரிமாறப்படுவதாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை புகார் வந்தது. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்.

* டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

'பசு இறைச்சி அல்ல'

* கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாமஸ் டெல்லியில் கூறும்போது, "கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது" என்றார்.

* "கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது" என்றார் ஜிஜி தாமஸ்.

உம்மன் சாண்டி கண்டனம்

* கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, "நடந்த சம்பவம் குறித்து செய்தித்தாள்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். டெல்லி போலீஸார் சற்று நிதானத்தை கையாண்டிருக்கலாம். கேரள இல்லம் என்பது கேரள மாநில முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் டெல்லி வந்தால் தங்குவதற்கான அதிகாரபூர்வ இடம்" என்றார்.

"கேரள இல்லம் தொடர்பாக புகார் வந்தால் அது குறித்து போலீஸார் முதலில் விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்திடம் தகவல்களைப் பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். மாட்டிறைச்சி தடை தொடர்பாக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்" என்றார் உம்மன் சாண்டி. இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் உம்மன் சாண்டி அனுப்பியுள்ளார்.

என்ன சொல்கிறது டெல்லி போலீஸ்?

இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, "இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது" என்றார்.

மார்க்சிஸ்ட் கொந்தளிப்பு

* மார்க்சிஸ்ட் கட்சி எம்பிஏ சம்பத் கூறும்போது, "கேரள அரசின் சொத்து கேரளா இல்லம். இந்தியாவில் வெளிநாட்டின் தூதரகம் போன்றது இந்த இல்லம். இந்திய அரசின் அதிகாரத்தை நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால், நடந்த சம்பவங்கள் கண்டிக்கத்தக்கதாகும். சில அமைப்பினர் நுழைந்ததின் பின்னணியில் அரசியல் இருக்கும் என்பதே எனது சந்தேகம். உணவுப் பொருள்கள் பட்டியலில் மீண்டும் எருமை இறைச்சி உணவு சேர்க்கப்படவேண்டும்" என்றார்.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கண்டனம்

* டெல்லி போலீஸ் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ''கேரளா இல்லத்தில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. கேரளா இல்லம் ஓர் அரசுக்குச் சொந்தமானது. போலீஸார் நினைத்த போதெல்லாம் சென்று சோதனை நடத்த அது தனியார் ஹோட்டல் கிடையாது. உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரள இல்லத்துக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.

டெல்லி போலீஸ் பாஜக மற்றும் சிவசேனா போன்று நடந்துகொள்கிறது. இதேபோல, டெல்லி முதல்வர் பவனுக்குள்ளும் நுழைந்து, மோடிக்கும் பாஜகவுக்கும் பிடிக்காத உணவை முதல்வர் உண்டு கொண்டிருந்தால் கைது செய்தோம் என்று கூறிவிடுவர்களா என்ன?" என்று கேஜ்ரிவால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

* மாட்டிறைச்சி விவகாரத்தில் டெல்லி போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, டெல்லியில் உள்ள கேரளா இல்லத்துக்கு வெளியே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x