Published : 10 Apr 2016 09:14 AM
Last Updated : 10 Apr 2016 09:14 AM

கேரளம் - கொல்லம் கோயில் வெடி விபத்து: பலி 110 ஆக அதிகரிப்பு; 350 பேர் காயம்

கேரளத்தின் கொல்லம் அருகே உள்ள கோயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பரவூர் புட்டிங்கல் தேவி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதற்காக, பட்டாசுகள் வாங்கி இருப்பு வைப்பதும் வழக்கம்.

அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கிடங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதையடுத்து, அங்கிருந்த வெடிபொருள்கள் முற்றிலுமாக வெடித்துச் சிதறின. வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 86 பேர் உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். கோயில்களில் பட்டாசு வெடித்து விழாக்களைக் கொண்டாட மாவட்ட மட்டத்தில் தடை உள்ளது என்றாலும் வெடிவெடிக்க தற்காலிக அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 9-ம் தேதியன்று பட்டாசு வெடிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்தார். ஆனால் இது வெறும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்ல பட்டாசு வெடிப்பதில் பந்தய போட்டிகள் நடைபெறுவதாகும் என்று கலெக்டர் அனுமதி மறுத்திருந்தார். எனவே உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியிலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரும் பக்தர்கள் ஆவர். இந்த வெடி விபத்து ஏற்பட்ட கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்துச் சிதறியது.கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.

கேரள அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கொல்லம் கோயிலில் ஏற்பட்ட இந்த விபத்து, கேரள மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி கொல்லம் விரைவு:

கொல்லம் கோயில் வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தீக்காய சிகிச்சை மருத்துவ நிபுணர்களுடன் விமானத்தில் கொல்லம் விரைந்துள்ளார்.

இவர் மதியம் 2 மணியளவில் திருவனந்தபுரம் வந்து பிறகு ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் விரைகிறார்.

பிரதமர் நிவாரண அறிவிப்பு:

கொல்லம் கோயில் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகை பிரதமர் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தலைமறைவு

விபத்து நிகழ்ந்ததை அடுத்து புட்டிங்கல் தேவி கோயிலின் உயர் மட்ட நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் மீது உயிரிழப்பை ஏற்படுத்தியதாக போலீஸார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்தவுடன் கோயில் நிர்வாகிகளை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

வாணவேடிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தந்தை மகனான சுரேந்திரன் மற்றும் உமேஷ் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் பலத்த காயங்களுடன் தற்போது திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பதில் போட்டி

உள்ளூரை சேர்ந்த இரு தரப்பினர் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்ததால் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கூறும்போது, ‘‘பட்டாசு வெடிப்பதற்கு இந்த முறை அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் சிறந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு பரிசுகள் வழங்கப்படும் என துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினர் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்தனர்’’ என்றார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவுக்கான சம்பிரதாயங்கள் முடிந்த பின் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை வாண வேடிக்கை நிகழ்த்தப்படும். அதே போல் இந்த முறையும் நடத்தப்பட்டபோது வாண வேடிக்கை நிகழ்ச்சி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

பட்டாசுகள் குவியலாக வைக்கப்பட்டிருந்த கட்டிடம் வெடித்துச் சிதறியதில், கான்கிரீட் துண்டுகள் பல அடி உயரத்துக்கு பறந்துள்ளன. இதில் ஒரு கி.மீ தொலைவில் பைக்கில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டி மீது செங்கல்லின் ஒரு பகுதி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: கேரள அரசு அறிவிப்பு:

பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளாகி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் உம்மன் சாண்டி.

இதற்கிடையே பிரதமர் மோடி திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அதன் பிறகு ஹெலிகாப்டரில் கொல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து சம்பவம் நடந்த பரவூர் கோயிலுக்கு முதல்வர் உம்மன் சாண்டியுடன் பிரதமர் மோடி சென்றார்.

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்ட ஹெல்ப் லைன்கள்: 0474-2512344 ; 9497960778; 9497930869

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x