Last Updated : 08 Jul, 2014 09:00 AM

 

Published : 08 Jul 2014 09:00 AM
Last Updated : 08 Jul 2014 09:00 AM

கொலை வழக்கை விசாரித்த அதிகாரியே குற்றவாளி: 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப் பிரதேசத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையில் அதன் விசாரணை அதிகாரியே முக்கிய குற்றவாளி என ராம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நகரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றியவர் ஷம்ஷாத் மிர்சா. இவர் கடந்த டிசம்பர் 12, 2001 அன்று நால்வரால் அவரது வீட்டிலேயே அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை குடும்பத் தகராறு காரணமாக செய்யப்பட்டதாக வழக்கின் முக்கிய எதிரிகளாக மிர்சாவின் மனைவி ஜஹீதா மிர்சா, 20 வயது மகன் கமால் அகமது மிர்சா மற்றும் சயீதா பாத்திமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கை சிவில் லைன் போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பி.டி.ரத்னாகர் விசாரித்தார்.இதில் விசாரணைக் கைதியான கமால் மிர்சா 2002-ம் ஆண்டில் சிறையிலேயே அடித்துக் கொல்லப் பட்டார். தாய் ஜஹீதா மிர்சாவிற்கு ஜாமீன் கிடைக்க ராம்பூரின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமார் 13 வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி நரேந்தர் சிங், வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் நிரபராதிகள் என விடுவித்ததுடன் வழக்கை விசாரித்து வந்த அதன் விசாரணை அதிகாரி ரத்னாகர்தான் முக்கிய குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

இதற்கு முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த மிர்சாவின் பக்கத்து வீட்டுக்காரரான உமேஷ் துபே தன்னை ரத்னாகர் மிரட்டி வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று மிரட்டி சாட்சியாக்கினார் எனக் கூறியதும் இதுபோல் மேலும் சில வழக்குகளில் ரத்னாகர் சிக்கி சிறையில் இருந்ததை ஆதாரமாக காட்டப்பட்டதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

மேலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரத்னாகரும் தனது குற்றத்தை நீதிபதி முன்பாக ஒத்துக் கொண்டார்.

மிர்சா மற்றும் அவரது மகன் கமால் ஆகிய இருவரையும் கொன்றதாக இரண்டு கொலை வழக்குகள், சாட்சிகளை மிரட்டியது, உண்மையை மறைத்தது, அரசு பணியை செய்யத் தவறியது என்பது உட்பட ஒன்பது வழக்குகளின் பிரிவுகளின் கீழ் போலீஸ் அதிகாரி ரத்னாகரை கைது செய்து வழக்கை புதிதாக விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு குறித்து ‘தி இந்து’விடம் அரசு தரப்பு வழக்கறி ஞரான தேவேந்திரகுமார் கூறுகையில், ‘ரத்னாகர் சம்பந்தப் பட்ட சில ஆபாச புகைப்படங்களின் ரோல் ஒன்று, மிர்சாவிடம் வேறு ஒருவர் மூலம் சிக்கிவிட்டது. இதை அறிந்த ரத்னாகர், அந்த ரோலை மிரட்டி பிடுங்கும் முயற்சியில் மிர்சாவை கொலை செய்து விட்டார்’ எனத் தெரிவித்தார்.

கொலை செய்யும் முன்பாக மிர்சாவிற்கு அவரது குடும்பத்தினர் விஷம் கலந்த உணவளித்தனர் எனக் கூறிய ரத்னாகர் அதன் மருத்துவ சான்றிதழை பெறவில்லை என தேவேந்திரகுமார் மேலும் கூறினார்.

2010-ல் சாஹிபாபாத் போலீஸ் நிலையப் பணியில் ரத்னாகர் இருந்தபோது ஒரு விசாரணை கைதியை கொன்ற வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது பிஜ்னோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x