Last Updated : 30 Aug, 2016 07:16 PM

 

Published : 30 Aug 2016 07:16 PM
Last Updated : 30 Aug 2016 07:16 PM

கூட்டு பயிற்சியின்போது சேவைகளை பரிமாறிக்கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம்: மனோகர் பாரிக்கர், ஆஷ்டன் கார்ட்டர் கையெழுத்து

இந்தியா அமெரிக்கா இடையிலான ராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கிடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்தானது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், அந்நாட்டு ராணுவ தலைமை அலுவலகத்தில் (பென்டகன்) பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தளவாடங்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எல்இஎம்ஓஏ) இருவரும் கையெழுத்திட்டனர்.

இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு போர் பயிற்சி, கூட்டு பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய பணிகளின்போது, தேவையான உதவிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை பரஸ்பரம் பெற்றுக் கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

குறிப்பாக, உணவுப்பொருள், தண்னீர், போக்குவரத்து, எரிபொருள், துணிமணிகள், மருத்துவ சேவைகள், உதிரி பாகங்கள் மற்றும் ராணுவ தளவாட பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை பரமாறிக் கொள்ளலாம். இதற்கான செலவை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்காவும் இந்தியாவும் உறுதி பூண்டுள்ளன. இதன் அடிப்படையில், பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கூட்டுறவில் உள்ள நவீன வாய்ப்புகள் மற்றும் புதுமைகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவுடன் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளம் அமைக்க முடியாது

இதுகுறித்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, மனோகர் பாரிக்கர் கூறும்போது, “இந்தியாவில் ராணுவ தளம் அமைத்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்படவில்லை. எரிபொருள் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட தளவாட உதவியை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கு மட்டுமே இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. அதுவும் குறிப்பாக உதவி தேவைப்படும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டியது அவசிம் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

ஆஷ்டன் கார்ட்டர் கூறும்போது, “இரு நாட்டு ராணுவத்துக்கிடையிலான கூட்டு பயிற்சியை சுலபமாகவும் திறமையாகவும் மேற்கொள்ள எல்இஎம்ஓஏ ஒப்பந்தம் வகை செய்கிறது” என்றார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ள நாடாக இந்தியாவை அங்கீகரித்தது. இதன் ஒரு பகுதியாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

வன்முறையை தூண்டும் பாகிஸ்தான்

இந்தப் பேட்டியின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பாரிக்கர் கூறும்போது, “காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், எல்லைக்கு அப்பால் உள்ள (பாகிஸ்தான்) சிலர் அங்கு வன்முறையைத் தூண்டி விடுகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x