Last Updated : 30 Jul, 2015 12:04 AM

 

Published : 30 Jul 2015 12:04 AM
Last Updated : 30 Jul 2015 12:04 AM

குடியரசுத் தலைவரால் யாகூப் மேமன் கருணை மனு நிராகரிப்பு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேனனின் புதிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை இரவு நிராகரித்தார்.



இதனால், ஏற்கெனவே கடைபிடிக்கத் தொடங்கிவிட்ட நடைமுறைகளின்படி, யாகூப் மேமன் வியாழக்கிழமை நாக்பூர் மத்திய சிறையில் தூக்கிலடப்படுவார் எனத் தெரிகிறது.

யாகூப் மேமன் கடைசி முயற்சியாக, தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனு ஒன்றை இன்று (புதன்கிழமை) அனுப்பினார்.

மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறைச் செயலர் எல்.சி.கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது, யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று ராஜ்நாத் சிங் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிரகாரித்தார்.

உச்ச நீதிமன்றத்தை நாடிய மேமன் தரப்பு...

கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், மேலும் ஒரு கடைசி முயற்சியாக, மேமனின் வழக்கறிஞர்கள் புதன்கிழமை பின்னிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். யாகூப் மேமனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளின்படி, அவருக்கு 14 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அதே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேமனின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

ஒரு தூக்கு தண்டனை கைதியின் முதலாவது கருணை மனு நிராகரிக்கப்படும்போதுதான் இந்தக் கோரிக்கை பொருந்தும் என்று அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மேமனின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

உச்ச நீதிமன்றம் தள்ளுபடி... மகாராஷ்டிர ஆளுநர் நிகாரிப்பு...

முன்னதாக, தன்னை ஜூலை 30-ம் தேதி தூக்கிலிட வகை செய்யும் உத்தரவை எதிர்க்கும் யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. அதேவேளையில், அவரது கருணை மனுவை மகாராஷ்டிர ஆளுநர் நிராகரித்தார்.

யாகூப் மேமன் மனு, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது. யாகூப் மேமன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 'தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவில் எந்தவித சட்ட நடைமுறைத் தவறுகளும் இல்லை.

மேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகு, யாகூப் மேமன் அதனை எதிர்த்து நீதிமன்றத்திடம் முறையீடு செய்யவில்லை. மேமனின் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றத்தின் 3 மூத்த நீதிபதிகள் நிராகரித்தது சரியே.

தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவைப் பெற்ற பிறகு யாகூப் மேமன் அனைத்து சட்ட உதவிகளையும் பெறும் அளவுக்கு கால அவகாசம் இருந்துள்ளது. ஜூலை 13, 2015-ல் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கிலிடப்படும் உத்தரவு அவருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்ததாகவே கோர்ட் கருதுகிறது.

ஆளுநரிடமோ, குடியரசுத் தலைவரிடமோ அளிக்கப்பட்டுள்ள கருணை மனு குறித்து தாங்கள் பரிசீலிக்க எதுவும் இல்லை. உச்ச குற்றவாளி செய்யும் இத்தகைய முயற்சிகள் நீதித்துறை நடைமுறைகள் மீது தாக்கம் செலுத்தாது" என்றது உச்ச நீதிமன்றம்.

நீதிபதி குரியன் ஜோசப் முன்னதாக, யாகூப் மேமன் கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வின் முடிவில் சட்ட நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி கருத்து கூறிய நீதிபதிகள், "கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியே என்பதாகவே கோர்ட் பார்க்கிறது. அதில் நடைமுறை தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறியது.

கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மூத்த நீதிபதிகள். எனவே அதன் மீது தவறுகள் காண முடியாது என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.

மகாராஷ்டிர ஆளுநரிடம் மேமன் அளித்த 2-வது கருணை மனு குறித்து நீதிமன்றம் எதுவும் கூற விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, உடனடியாக மகாராஷ்டிர மாநில ஆளுநர், யாகூப் மேமன் கடந்த வாரம் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்தார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு...

1993 மார்ச் 12-ம் தேதி பிற்பகலில் மும்பை நகரில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியாயினர். 700 பேர் காயம் அடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பில் தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் தம்பி யாகூப். 2007 ஆண்டு ஜூலை 27-ம் தேதி தடா நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர். பிற சகோதரர்களான எசா, யூசுப், உறவுக்கார பெண் ரூபினா ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர்.

தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x