Published : 12 Sep 2016 05:51 PM
Last Updated : 12 Sep 2016 05:51 PM

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்த் விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டதாக வந்த செய்திகளை கர்நாடகா போலீஸ் மறுத்தது. ஆனால் மாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

கர்நாடகா அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தமிழகத்துக்கான அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி வைத்துள்ளது. மைசூருவில் கடைகள் மூடபட்டுள்ளன.

பெங்களூரு நிலவரம்:

பெங்களூருவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், பெங்களூரில் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்துள்ளார்கள். 12.30 மணி முதல் நம்ம மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

குறிப்பாக மைசூரு சாலையில் ஒட்டுமொத்தமும் குழப்பமான நிலை நீடிக்கிறது. தனியார் பள்ளிகள் குழந்தைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றொருக்குஅறிவுறுத்தியுள்ளது. சில தனியார் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்வதை உறுதி செய்ய கூடுதல் ஆசிரியர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் ஐடி துறையைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு பதிவு வாகனங்களை எடுத்து கொண்டு சாலைகளில் வரவேண்டாம் என்று எச்சரித்து வருகின்றனர்.

மைசுரு பேங்க் சர்க்கிளில் கன்னட ஆர்பாட்டக்காரர்கள் மனிதச் சங்கிலி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையை முற்றிலும் வழிமறித்துள்ளனர். எலஹங்கா புதிய டவுனில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் லாரி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

பி.இ.எச். கல்லூரி சுங்கச் சாவடி அருகே தமிழ்நாடு லாரி ஒன்றுக்கு தீவைக்கப்பட்டது. மகதி சாலையிலும் லாரி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது. சாட்டிலைட் பஸ் ஸ்டேண்டில் உள்ள அடையார் ஆனந்த பவன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வளாகம் சூறையாடப்பட்டு சேதமடைந்துள்ளது.

வட்டால் நாகராஜ் மற்றும் பிற கன்னட ஆர்பாட்டக்காரர்கள் விதான் சவுதா அருகே கைது செய்யப்பட்டனர். முன்னதாக இவர்கள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள கன்னடக்காரர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதே வேளையில் தமிழ்ச் சங்க் உறுப்பினர்களும் சித்தராமையாவிடம் நகரத்தில் உள்ள 25 லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தினர்.

வன்முறையையடுத்து நம்ம மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டன. பெங்களூருவில் மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சுமார் 18,000 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் சில பகுதிகளில் கன்னடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டு முதல்வர் சித்தராமையா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது குறித்து கடிதம் எழுதப்போவதாக தெரிவித்துள்ளார்.

மைசூரு நிலவரம்:

காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆர்பாட்டம் மூண்டதையடுத்து சாமராஜன் நகர் மாவட்டத்தின் தமிழக-கர்நாடக எல்லை மூடப்பட்டது. சாமராஜன்நகர் மாவட்டத்தை இணைக்கும் 7 தமிழக சாலைகளில் காவல்துறையினர் செக்போஸ்ட்களை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூரில் கவலைதரும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

200 பேர் கைது:

கர்நாடகாவில் ஆர்பாட்டக்காரர்கள் 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்பெற அனைத்து உதவிகளையுன் செய்யத் தயார் என்று மத்திய அரசு கர்நாடகத்திற்கு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x