Last Updated : 29 Sep, 2016 01:22 PM

 

Published : 29 Sep 2016 01:22 PM
Last Updated : 29 Sep 2016 01:22 PM

காவிரி பிரச்சினையில் கர்நாடகம் பிடிவாதம்: இழுபறியில் முடிந்தது இரு மாநில பேச்சுவார்த்தை

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடந்த இருமாநில கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படவில்லை.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்துவந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி டெல்லியில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கர்நாடகா அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நிபுணர் குழு அமைக்குமாறு கர்நாடக அரசு மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவை நாளை உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கின்போது மத்திய அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தராமையா திட்டவட்டம்:

கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "தற்போதைய சூழலில் கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு மாநிலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே இருக்கிறது.

எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கில்லை. காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 'வாழு வாழவிடு' என்று அறிவுரை கூறியுள்ளது. ஆனால், நாங்களும் வாழ வேண்டும் அல்லவா. உச்ச நீதிமன்றம் எங்களையும் வாழ அனுமதிக்கட்டும்" என்றார்.

ஒரு போக சம்பாவுக்காக...

தொடர்ந்து பேசிய தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி நீர் திறக்கப்பட்டால்தான் ஒரு போக சம்பாவாவது தமிழக விவசாயிகளால் பயிரிட முடியும்.

எனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதே சரியானதாகும். ஆனால், கர்நாடகா அரசோ காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்.

கர்நாடக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது" என்றார்.

இருதரப்பு கருத்துகளையும் கேட்ட பின்னர் மத்திய அமைச்சர் உமாபாரதி, காவிரி பிரச்சினையில் இக்கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x