Last Updated : 31 Jul, 2015 09:14 AM

 

Published : 31 Jul 2015 09:14 AM
Last Updated : 31 Jul 2015 09:14 AM

கலாம் கடைசியாக தைக்க கொடுத்த ஆடைகள்: ஞாபகார்த்தமாக வைத்திருக்க டெய்லர் முடிவு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இறப்பதற்கு முன்பாக இரு புதிய ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கும்படி, தனக்கு வழக்கமாக ஆடைகள் தைக்கும் டெய்லரிடம் கூறியுள்ளார். ஆடைகள் தயாராகிவிட்ட நிலையில், கலாம் இறந்துவிட்டதால் அவரின் நினைவாக அந்த ஆடைகளை தானே பத்திரமாக பராமரிக் கப்போவதாக அந்த டெய்லர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆரிய சமாஜ் சாலையில் ‘ஃபேர் டீல் ஷாப்’ எனும் பெயரில் தையலகம் நடத்தி வருபவர் அமர் ஜெயின். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அப்துல் கலாமுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்து வந்துள்ளார்.

இவரிடம் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக சென்ற கலாம், இரண்டு கோட்- சூட் ஆடைகளை தைத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். தைக்கப்பட்ட ஆடைகளை கலாம் டெல்லியில் வசித்த 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு இல்லத்தில் கொடுப்பது டெய்லர் அமனின் வழக்கம்.

ஆடைகள் தயாராகிவிட்ட நிலையில், கலாம் அமரராகி விட்டார். இதையடுத்து அந்த ஆடைகளை, அப்துல் கலாமின் நினைவாக போற்றிப் பாதுகாக்க அமன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமன், ‘தி இந்து’ விடம் கூறியதாவது: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் அவர் முதன்முறையாக வந்தபோது, டிஆர்டிஓ-வில் பணி யாற்றி வந்தார். மிகவும் வெளிறிய நிறங்களே அவருக்குப் பிடிக்கும்.

மேல் சட்டையில் தங்க நிற பொத்தான்களும், அதற்கு மேல் அணியும் கோட்டில் வெள்ளி நிற பொத்தான்களும் எப்போதும் இருக்கும். ஆண்டுக்கு, இரண்டு முறை மட்டுமே புதிய உடைகள் அணிவார். உடைகள் சீக்கிரம் கிழியாமல் இருக்க சில சமயம் அதிகமான தையல்கள் போடக் கூறுவார்.

அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் என்னிடமே ‘பந்த் கலா (கழுத்தை மூடியபடி இருப்பது)’ வகை சூட் வடிவமைக்க கொடுத்திருந்தார். அப்போது, அது கழுத்தை இறுக்கியபடி இருந்த அந்த உடை அவருக்கு வசதியாக இல்லை போலும். இதனால், அடுத்த முறை கழுத்துக்கு அருகே சற்று இடைவெளி விட்டே தைக்கும்படி கூறினார்.

காரணம் கேட்டபோது அவர், ‘இப்படி ஒரு குடியரசு தலைவரின் குரல்வளையை நசுக்கினால் இந்த நாட்டின் முன் அவர் எப்படி பேசுவார்? மக்களிடம் தனது கருத்தை எப்படி சொல்வார்?’ என சிரித்தபடி பதில் அளித்தார். அதன் பிறகு பந்த் கலா சூட்டின் கழுத்தில் பொத்தான் இன்றி விடப்படும் இடைவெளிக்கு ‘கலாம் கட்’ எனப் பெயர் வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x