Last Updated : 29 May, 2016 10:48 AM

 

Published : 29 May 2016 10:48 AM
Last Updated : 29 May 2016 10:48 AM

கர்நாடக மாநிலத்தில் வேகமாக பரவும் பறவை காய்ச்சலால் 2 லட்சம் கோழிகள் இற‌ப்பு: தமிழகம், ஆந்திரா, கேரள எல்லைகளில் கண்காணிப்பு

கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. மேலும் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநில எல்லைகளில் கால்நடைத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர்.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் கிராமத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருபவர் ரமேஷ் குப்தா. இவரது பண்ணையில் கடந்த மாத இறுதியில் நோய் தொற்று ஏற்பட்டு 8 ஆயிரம் கோழிகள் திடீரென இறந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி 23 ஆயிரம் கோழிகள் இறந்தன. கடந்த ஒரு மாதத்தில் 35 ஆயிரம் கோழிகள் இறந்த‌தால் ரமேஷ் குப்தா கர்நாடக கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அதிகாரிகள் ரமேஷ் குப்தாவின் கோழிப் பண்ணைக்கு சென்று ஆய்வு செய்து, இறந்த கோழிகளில் மாதிரிகளை சேகரித்தனர். அதனை போபாலில் உள்ள கால்நடை ஆய்வு மையத்தில் சோதித்ததில், பறவை காய்ச்சல் (ஏவியன் இன்ஃபுளுயென்சா) காரணமாகவே கோழிகள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மஞ்சு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ரமேஷ் குப்தாவின் கோழிப்பண்ணையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்குள்ள 1. 5 லட்சம் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஹெச்5என்1 வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பறவை காய்ச்சல் வைரஸ் வேறு இடங்களுக்கு பரவாத வகையில் நடவடிக்கை யில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக ப‌றவை காய்ச்சல் பாதிப்புள்ள 1.5 லட்சம் கோழிகளை ஆழமாக குழித் தோண்டி புதைத்தனர். அந்த பண்ணையில் இருந்த 1 லட்ச‌ம் முட்டைகளையும் புதைத்தனர். இதையடுத்து பெலகாவி, பீஜாப்பூர், மங்களூரு ஆகிய இடங் களில் பறவை காய்ச்சலால் பாதிக் கப்பட்டிருந்த கோழிகளையும் அழித்துள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர் கூறுகையில், '' பறவை காய்ச்சல் பரவியதை முன்கூட்டியே கண்டுபிடிக்க‌ப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற் போது கர்நாடகாவில் பறவை காய்ச்சல் முற்றிலுமாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச் சலின் காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. மொத்தமாக 1.3 லட்சம் முட்டை கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ. 6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப் பதாக மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது.

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலால் மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய மாவட்டம் தோறும் 5 பேர் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்ட றியப்படாததால், மக்கள் அச்ச‌ப்பட தேவையில்லை. கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா வில் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் கோழிகள் தீவிரமாக கண்காணிக் கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என அதிகாரி கள் எல்லைப் பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஹம்னாபாத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் அதிகாரி களின் அறிக்கை வந்த பிறகு மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி இறைச்சியின் விலை கிலோ ரூ.190- ல் இருந்து ரூ.170 ஆக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x