Last Updated : 29 Apr, 2016 01:14 PM

 

Published : 29 Apr 2016 01:14 PM
Last Updated : 29 Apr 2016 01:14 PM

கட்டாய நாடு கடத்தலுக்கு ஆளான என்னிடம் இந்தியா திரும்பும் திட்டம் இல்லை: மல்லையா

'கட்டாய நாடு கடுத்தல்' நிலைக்கு தான் ஆளானதாகவும், இப்போதைக்கு இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் எனது பாஸ்போர்ட்டை முடக்கலாம் அல்லது என்னை கைது செய்யலாம் ஆனால் வங்கிகளுக்கு பணம் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'ஃபினான்ஸியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் இந்தியா திரும்புவதற்கே நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், இப்போது நிலைமை கைமீறிவிட்டது. என் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அரசு அடுத்து என்ன செய்யும் என்று தெரியவில்லை.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதே முக்கியம். மக்களை மட்டுமின்றி அரசிடமும் தேவையின்றி டிவி, இணைய ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரிட்டனில் இருப்பதே இப்போதைக்குப் பாதுகாப்பு என்றும், நாடு திரும்பும் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ள அவர், கட்டாய நாடு கடத்தலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் வங்கிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்து வருகிறது.

முன்னதாக அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தங்களது நோட்டீஸுக்கு மல்லையா அளித்த பதில், அமலாக்கத் துறையினர் அளித்த தரவுகள், மற்றும் ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போது நிரந்தரமாக விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது.

தன்னுடைய வெளிநாட்டு சொத்துகளை தான் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய் மல்லையா திட்டவட்டமாக மறுத்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அமலாக்கத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவை, நாடு கடத்தக் (தங்களிடம் ஒப்படைக்க) கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “விஜய் மல்லையாவுக்கு எதிராக, கிரேட்டர் மும்பையில் உள்ள நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத் துறை எங்கள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மல்லையாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x