Published : 11 Dec 2013 11:25 AM
Last Updated : 11 Dec 2013 11:25 AM

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றத்துக்குரிய செயல் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமற்றச் செயல் என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு சமூக, மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை அனுமதிப்பது நாட்டின் கலாச்சார, மத நெறிமுறைகளுக்கு மாறானது என்று அந்த அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக நாஸ் அறக்கட்டளை வாதிட்டது.

மத்திய அரசு தரப்பில், ஓரினச் சேர்க்கை குற்றமற்றச் செயல் என வாதிடப்பட்டது. இது தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.

இன்றைய இந்திய சமூகம், ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளும் அளவுக்கு பக்குவமடைந்துள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நாட்டில் சுமார் 25 லட்சம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கக் கூடும். இதில் 7 சதவீதத்தினருக்கு (1.75 லட்சம் பேர்) எச்.ஐ.வி. நோய் தாக்கியுள்ளது.

ஆணுடன் ஆண் பாலியல் உறவு வைத்திருக்கும் 4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயுள் தண்டனை:

இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் மாத இறுதிவரை உச்ச நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்தியது. பின்னர், தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: “இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல்.

அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தி உரிய முடிவு செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை நீக்க நாடாளுமன்றத்துக்குத்தான் உரிமையுள்ளது.

அதுவரை, இந்த குற்றத்துக்கான தண்டனை சட்டம் அமலில் இருக்கும். எனவே, இதுபோன்ற பாலியல் உறவை சட்டப்பூர்வமாக்க இன்றைய நிலையில் நீதிமன்றத்தால் இயலாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, முந்தைய விசாரணைகளின்போது இந்த வழக்கில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ஓரினச்சேர்க்கை விவகாரத்தை மிகவும் அசட்டையாக மத்திய அரசு அணுகுகிறது. இதுபோன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. அதே சமயம் நீதிமன்றம் ஏதாவது கருத்து தெரிவித்தால், அதை தலையீடு என்று நாடாளுமன்றம் கூறுகிறது என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

வழக்கின் பின்னணி:

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை என அறிவிக்கக் கோரி நாஸ் (NAZ) அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்துக்குச் சென்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று நாஸ் அறக்கட்டளை கோரியது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமற்றச் செயல். இதில் ஈடுபடுவோர் பரஸ்பர சம்மதத்துடன் தனிமையில் பாலியல் உறவு கொள்வது தவறு இல்லை எனத் தெரிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் பி.பி.சிங்கால் (இவர் கடந்த அக்டோபர் மாதம் காலமானார்), உத்கல் கிறிஸ்துவ கவுன்சில், அபோஸ்தல தேவாலய கூட்டமைப்பு, குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பு, ரஸா அகடமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு சமூக, மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x