Published : 02 Mar 2014 06:58 PM
Last Updated : 02 Mar 2014 06:58 PM

ஏப்ரல் 7-ல் மக்களவைத் தேர்தல்?- 7 கட்டங்களாக நடத்த திட்டம்

ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தல் தொடங்கும் என்றும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

15-வது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைவதால் மே 31-க்குள் புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி தேர்தல் தேதிகளை இறுதி செய்வதற்கான பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2009 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடத்தப் பட்டது. தற்போதைய மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை 6 கட்டங்களாக குறைக்கவும் ஆலோ சிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வரும்.

கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோடை வெப்பம் காரணமாக தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்ரலில் வாக்குப் பதிவை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்களவைத் தேர்தலோடு தெலங்கானா (117), ஆந்திரம் (சீமாந்திரா) (175), ஒடிசா (147), சிக்கிம் (32) ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சில அவசரச் சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் தேர்தல் தேதி அறிவிப்பு சற்று தள்ளிப்போகலாம் என்று உறுதி செய்யப்படாத சில தகவல்களும் வெளியாகி உள்ளன.

6 அல்லது 7 கட்டத் தேர்தல்

நாடு முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முதல் கட்டத்தி லேயே தேர்தல் நடக்கும் என்றும் தெரிகிறது.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குப் பதிவின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற் கொண்டு வருகிறது. அதன்படி பெரும் எண்ணிக்கையிலான மாநில போலீஸார் மற்றும் துணை ராணுவப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள், அந்தந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

81.4 கோடி வாக்காளர்கள்

நாடு முழுவதும் 81.4 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 9.71 கோடி பேர் புதிய வாக்காளர்கள். மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. புதிதாக 2.5 லட்சம் மின்னணு எந் திரங்கள் விரைவில் வந்து சேரும். தேர்தல் பணியில் மொத்தம் 1.1 கோடி பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினரும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்

புதிய அம்சங்கள் அறிமுகம்

கடந்த மக்களவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பு ரூ.40 லட்சமாக இருந்தது. இந்தத் தேர்தலில் செலவு வரம்பு ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் ‘நோட்டா’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலில் இந்த வசதி முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

மேலும் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை யும் இத்தேர்தலில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x