Last Updated : 29 Sep, 2016 03:25 PM

 

Published : 29 Sep 2016 03:25 PM
Last Updated : 29 Sep 2016 03:25 PM

எல்லையில் தாக்குதல் வியூகம்: பிரதமர், ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் பாராட்டு

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடியாக வியூகம் வகுத்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு: >| காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு |

இந்நிலையில், பாஜக தேசிய செயலர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது, "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். அவர்கள் நமது எல்லையை மீட்டெடுத்துள்ளனர். பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லோயோர பயங்கரவாதத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொண்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம்" எனக் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது ராணுவத்தால் பெருமை அடைகிறேன். அவர்களது தாக்குதல் தலைசிறந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸும் பாராட்டு:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் காரியதரிசி அகமது படேல், "இந்திய ராணுவத்துக்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ராணுவத்துக்கு எப்போதும் துணை நிற்போம்" என்றார்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா கூறும்போது "பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல் வரவேற்கத்தக்கது. நமது ராணுவத்தின் வீரத்துக்கு தலை வணங்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x