Published : 14 Jun 2015 06:02 PM
Last Updated : 14 Jun 2015 06:02 PM

ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு உதவியதால் அமைச்சர் சுஷ்மாவுக்கு நெருக்கடி: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், சுஷ்மா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி யின்போது, மேட்ச் பிக்ஸிங், சூதாட் டத்தில் சுமார் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும், இதில் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டு திடீரென இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார் லலித் மோடி. அதன்பிறகு அவர் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். அதன்பிறகு தேடப்படும் குற்றவாளி யாக லலித் மோடியை அமலாக்கத் துறையினர் அறிவித்தனர்.

இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்ல விசா வழங்கக் கோரி இங்கிலாந்து அரசிடம் லலித் மோடி கடந்த ஆண்டு விண் ணப்பித்திருந்தார். ஆனால், இந்தியாவில் அவர் மீது வழக்கு உள்ளதால், விசா வழங்குவதில் பிரச்சினை நிலவியது. இதையடுத்து, லலித் மோடிக்கு விசா வழங்க, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸ் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், “லலித் மோடிக்கு விசா உட்பட பயண ஆவணங்கள் வழங்க இங்கிலாந்து குடியேற்ற துறைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நெருக்கடி கொடுத்தார். நானும் பரிந்துரை செய்தேன்” என்று வாஸ் கூறியதாக இங்கிலாந்து ஊட கங்களில் செய்தி வெளியானது. இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை சுஷ்மா நேற்று நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துரைத்தார். பின்னர் ட்விட்டரில் சுஷ்மா கூறியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் லலித் மோடி என்னிடம் பேசினார். அப்போது, “என் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகஸ்ட் 4-ம் தேதி அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அதற்கான ஒப்புதல் ஆவணங்களில் கணவன் என்ற முறையில் நான் கையெழுத்திட வேண்டும். ஆனால் போர்ச்சுக்கல் நாட் டுக்கு செல்ல விசா வழங்க இங்கிலாந்து அரசு மறுப்பு தெரிவிக்கிறது” என்று லலித் மோடி என்னிடம் கூறினார்.

அதன்பிறகுதான், மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவி செய்தேன். இங்கிலாந்து சட்டப்படி லலித் மோடி விண்ணப்பத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை செய்யுங்கள் என்றேன். மேலும், இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். இங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் என்ன கூறினேனோ, அதையேதான் கீத்திடமும் கூறினேன்.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

இதற்கிடையில், எம்.பி.க்களின் நடத்தை விதிகளை கீத் வாஸ் மீறி னாரா என விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற ஆணையருக்கு இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. ஆண்ட்ரூ பிரிட்ஜென் கடிதம் எழுதி உள்ளார்.

பதவி விலக வலியுறுத்தல்

திக்விஜய் சிங் (காங்கிரஸ் மூத்த தலைவர்):

தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லலித் மோடிக்கு சுஷ்மா உதவி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தார்மீக அடிப்படையில் அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கே.சி.தியாகி (ஐஜத செய்தித் தொடர்பாளர்):

லலித் மோடிக்கு சுஷ்மா உதவியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்):

பொருளாதார குற்றங்களுக்காக தேடப்படும் லலித் மோடிக்கு உத வியதாக அமைச்சர் சுஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார். இது கவலை அளிக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சினை. சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன் என்று பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியில் இதுவும் ஒன்றா என்பதை விளக்க வேண்டும்.

பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு

இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும் போது, “புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ள மனைவியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி உதவி கேட்டால், யாராக இருந்தாலும் மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும். அதைத்தான் சுஷ்மா செய்துள்ளார். அதற்காக அவர் ராஜினாமா செய்ய வேண் டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது” என்றார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறும்போது, “எதிர்க்கட்சி யினர் இந்த விஷயத்தை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக் கின்றனர். அவர்களுடைய எண் ணம் நிறைவேறாது” என்றார்.

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரும் சுஷ்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x