Last Updated : 12 Mar, 2015 08:34 AM

 

Published : 12 Mar 2015 08:34 AM
Last Updated : 12 Mar 2015 08:34 AM

உ.பி. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை: தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள சப்-இன்ஸ்பெக்டர் சுட்டதாக போலீஸ் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸார் மீதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதியே கலவர பூமியானது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வழக்கறிஞர் ரோஷன் அகமது என்றும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பெரோஸ் நபி என்றும் தெரிய வந்துள்ளது.

வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து தாக்க வந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மிருதுஞ்சய் மிஸ்ரா கூறினார். எனினும் வழக்கறிஞருக்கும், சப்- இன்ஸ்பெக்டருக்கும் இடையே எதனால் மோதல் ஏற்பட்டது என்பது தெரியவரவில்லை.

துப்பாக்கியால் சுட்டது யார் என்பது முதலில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சப்- இன்ஸ்பெக்டர் சைலேஷ் குமார் சிங்தான் சுட்டார் என்றும், பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. அதையடுத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற பகுதியிலும் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் கட்டிடங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அலகாபாத்-கான்பூர் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தி போக்குவரத்தை தடுத்தனர். சில வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த வாகனங்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமானவை.

உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நேரில் வந்து சமாதானம் செய்த பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் அடங்கியது. வாகனங்கள் தீ வைக்கப்பட்டதால் போக்குவரத்து உடனடியாக தொடங்கவில்லை.

மாவட்ட நீதிமன்ற வளாகம் சென்று நிலைமையை நேரில் கண்டறிவதாக வழக்கறிஞர்களிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x