Last Updated : 27 Jun, 2017 09:32 AM

 

Published : 27 Jun 2017 09:32 AM
Last Updated : 27 Jun 2017 09:32 AM

உடுப்பி பெஜாவர் மடத்தில் இப்தார் விருந்து: மத நல்லிணக்க நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு

கடலோர க‌ர்நாடகாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதக் கலவரமும், மோதல்களும் அரங்கேறி வருகின்றன. உடுப்பி, மங்களூரு, பட்கல் ஆகிய இடங் களில் இரு பிரிவினர் இடையே தொடரும் மோதல்களால் அவ்வப் போது சட்டம் - ஒழுங்கு சீர் குலைகிறது.

இந்நிலையில் உடுப்பியில் பழமையான பெஜாவர் மடத்தில் முதல்முறையாக, கடந்த சனிக் கிழமை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. பெஜாவர் மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமி (86) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அஞ்சம் மசூதி மவுலானா இன்னாயித்துல்லா உட்பட 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், இந்து மத அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

அதிகாலை நேரத்தில் தொழுகை முடிந்து மடத்தின் அன்னபிரமா வளாகத்தில் இப்தார் நோன்பு திறக் கப்பட்டது. அப்போது இஸ்லாமியர் களுக்கு பேரீட்சை, வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள் மற்றும் முந்திரிப் பருப்புகளை மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமி பரிமாறினார். இந்த சைவ இப்தார் விருந்தின் இறுதியில் கறுப்பு மிளகில் தயாரிக்கப்பட்ட கஷாயம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக பெஜாவர் மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமி கூறும்போது, “ இந்து -இஸ்லாமியர் இடையே மத‌ நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற் காக இந்த ‘மத நல்லிணக்க உணவு’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எனது அழைப்பை ஏற்று, ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்துக்களும், இஸ்லாமியர் களும் ஒரே கடவுளின் பிள்ளைகள். குடும்பத்தின் உற்ற சகோதரர்கள். மதத்தின் பெயரால் மோதல் போக்கு கடைப்பிடிப்பதை கடவுள் விரும்புவதில்லை” என்றார்.

உடுப்பி பெஜாவர் மடத்தின், இந்த மத நல்லிணக்க நட வடிக்கையை இஸ்லாமிய மத தலைவர்களும், இந்து மத‌ அமைப்பினரும் பாராட்டியுள்ளனர். கர்நாடக அமைச்சர் யூ.டி.காதர், சிறுபான்மை நல ஆணைய தலைவர் எம்.ஏ.காபூர் ஆகியோரும் இந்த நிகழ்வை மனதார பாராட்டியுள்ளனர். இரு மதத்தினர் இடையே மோதல் நீடிக்கும் கடலோர கர்நாடகாவில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x